

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் அரவிந்த் கேஜ்ரிவால் பொறுப்புகளில் இருந்து விலகி ஓடுகிறார் என ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை வழங்கிய அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அவற்றை நிறைவேற்ற முடியவில்லை, அதனாலேயே அவர் பொறுப்புகளில் இருந்து விலகி ஓடுகிறார் என, லாலு அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், கேஜ்ரிவால் தனது ராஜினாமாவிற்கு ஜன் லோக்பால் மசோதாவை காரணம் காட்டியிருப்பது முதல்வர் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருக்கும் நெருக்கடியை நேரடியாக சுட்டிக்காட்ட முடியாததே காரணம். எனவே தான் வெளியில் இருந்து ஒரு காரணத்தை தேடி கூறியுள்ளார் என்றார்.
மேலும், பதவி விலகும் முன்னர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏன் மக்களிடம் கருத்து கேட்கவில்லை என்றும் லாலு கேள்வி எழுப்பியுள்ளார்.