

இந்தியாவின் ‘ரா’ அமைப்பைச் சேர்ந்த உளவாளிகள் என்று குற்றம் சாட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடந்த 2016 மார்ச்சில் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவருக்கு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் ரா அமைப்பைச் சேர்ந்த உளவாளிகள் என்று குற்றம் சாட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த முகமது கலீல், இம்தியாஸ், ரஷீத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலீஸார் கூறியதாவது: கடந்த 2014 நவம்பரில் இந்திய காஷ்மீர் பகுதிக்கு முகமது கலீல் சென்றார். அங்கு அவர் ரா உளவாளியாக மாறினார். பின்னர் அபாஸ்பூர் அருகே டரோதியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய முகமது, அதே கிராமத்தைச் சேர்ந்த இம்தியாஸ், ரஷீத் ஆகியோரையும் ரா அமைப்பில் இணைத்தார்.
மூன்று பேரும் சேர்ந்து கடந்த செப்டம்பர் 27-ல் அபாஸ்பூர் போலீஸ் நிலையத்தில் வெடி குண்டை வெடிக்கச் செய்தனர். இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை. பின்னர் ஒரு ராணுவ பதுங்கு குழியையும் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். அதன்பேரில் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.