

தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரித்து வரும் கோவா போலீசார் இன்று இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் 3 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், தருண் தேஜ்பால் அளித்த பாலியல் தொந்தரவு குறித்து, தன்னுடன் பணியாற்றும் 3 பேரிடம் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட 3 பேரிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
9 மணி நேரம் விசாரணை:
முன்னதாக இன்று காலையில் ,கோவா மாநில காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சாமி டவேரஸ் தலைமியிலான 4 பேர் கொண்ட கோவா போலீசார் இன்று தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடம் விசாரணை மேற்கொண்டனர். 9 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் தெஹல்கா அலுவலகத்தில் இருந்து சில லேப்டாப்கள், ஐ பேட் போன்றவற்றை கைப்பற்றி ஆய்வு செய்ய இருப்பதாக கோவா போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தெஹல்கா இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது, பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ள பெண் பத்திரிக்கையாளார், தி ஹிந்துவிடம் பேசுகையில், தன்னையும் தன் குடும்பத்தையும் அச்சுறுத்தி, பணிய வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தருண் தேஜ்பாலிடம் தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தாமலேயே கோவா போலீசார் டெல்லியில் இருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.