காஷ்மீர் எல்லையில் 2 முறை அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் படையினர் 2 முறை தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையில் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் எல்லையில் உள்ள பாலகோட் செக்டாரின் பிம்பெர் கலி என்ற இடத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே, பாகிஸ்தான் படையினர் நேற்று திடீரென சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உஷாரடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்.
எல்லையில் இதுபோல் 2 முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அதிகாலை 6 மணியில் இருந்து 6.45 வரை துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடிகுண்டுகள் வீசியும் பாகிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும், இந்திய படையினர் சரியான பதிலடி கொடுத்தனர். கடந்த 11 நாட்களில் நேற்றுடன் சேர்த்து இதுவரை 5 முறை பாகிஸ்தான் படையினர் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தகவலை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
