

பிஹாரில் நக்சல்கள் தாக்குதலில் பலியான 10 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு சிஆர்பிஎப்பில் இருந்து கோப்ரா பிரிவு உருவாக்கப்பட்டது. இப்பிரிவை சேர்ந்த வீரர்கள் பிஹாரின் அவுரங்கபாத் மாவட்டத்தில் மதன்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சக்கர்பாந்தா வனப்பகுதி யில் நக்சல் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்களை பிடிப்பதற் காக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சல் தீவிரவாதிகளை நோக்கி கோப்ரா வீரர்கள் துப்பாக்கி யால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று முன் தினம் இரவு கோப்ரா வீரர்கள் இருப்பிடத்தை சுற்றி வளைத்த 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அங்கு புதைத்து வைத்திருந்த 22 அதிநவீன கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்தனர். இதில் கோப்ரா பிரிவு வீரர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். பலர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து காயமடைந்த வர்களை மீட்பதற்காக சிஆர்பிஎப் சார்பில் ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும் அப்பகுதியில் ஏராளமான நிலக் கண்ணி வெடிகளை நக்சல் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்ததால் காய மடைந்தவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் காயமடைந் தவர்களில் 2 பேர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிதமர் அலுவலகம் வெளியிட்ட ‘ட்விட்டர்’ செய்தியில், ‘‘பிஹாரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த் திப்பதாகவும் தெரிவித்துள்ளார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தார். நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அவரிடம் உறுதியளித்தார்.
இதற்கிடையில் உயிரிழந்த 10 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.