

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தலையிடுவதை ஏற்க முடியாது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைனா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் நடைபெறுகிறதா என்பதைக் கண்டறிய காஷ்மீருக்கு வருகை தர ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை வைத்ததன் அக்கறையைப் பாராட்டுவதாகத் தெரிவித்த ஷைனா, “அக்கறையைப் பாராட்டுகிறேன் அதற்காக அவர்கள் தலையிடும் பகுதி அல்ல காஷ்மீர். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். எனவே அங்கு எது நன்மை என்பதை தீர்மானிக்க நம் நாட்டு அரசு உள்ளது.
ஒருநாட்டுக்குள் அனைத்து விஷயங்களுடன் வந்து பார்வையிடுவதும் அரசு அதனை ஏற்றுக் கொள்வதும் ஒரு விஷயம் என்றால், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுநிலையாளராக செயல்பட ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு விருப்பம் தெரிவிப்பது ஏற்க முடியாத ஒன்று.
நம் வெளியுறவுச் செயலர் (ஜெய்சங்கர்), பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் குறித்து பேசத் தயார் என்றும் காஷ்மீர் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று தெள்ளத் தெளிவாகக் கூறியதை வரவேற்கிறேன். நாம் எதைப் பேச வேண்டும் என்பதை பாகிஸ்தான் தீர்மானிக்கக் கூடாது” என்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், பிரதமர் மோடி குறித்து கூறிய விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக, “நாட்டின் பிரதமர் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் மோடி பிரதமர் என்பதை சல்மான் குர்ஷித் உணர வேண்டும். பலுசிஸ்தான் குறித்து மோடி கருத்து வெளியிடுகிறார் என்றால் அது புத்திசாலித்தனமான சிந்தனையே” என்றார்.
காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் நடைபெறுவதாக பாகிஸ்தான் கடிதம் எழுதியதையடுத்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் காஷ்மீருக்கு வருகை தரும் தங்கள் விருப்பத்தைக் கடிதம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.