

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், கலவபுடி பகுதியில் ‘ஜன்ம பூமி’ அரசு திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து கூட்டத்தில் பேசியதாவது: பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அதையொட்டி தூய்மை ஆந்திரா எனும் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்று நமது வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் அனைவரது வீடுகளிலும் கழிவறை இருப்பது அவசியம் மட்டுமல்ல. அது நாகரீகத்தின் அடையாளமுமாகும்.
மீனவர்களின் நலத்திட்டத் திற்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர் வசதி செய்து தரும் திட்டம் அமல்படுத்தப்படும். கிராம பஞ்சாயத்து வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 1,300 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.