சென்னையில் உள்ள ஆலை உட்பட விஜய் மல்லையாவின் ரூ. 1,411 கோடி சொத்துகள் முடக்கம்

சென்னையில் உள்ள ஆலை உட்பட விஜய் மல்லையாவின் ரூ. 1,411 கோடி சொத்துகள் முடக்கம்
Updated on
1 min read

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ. 1,411 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை (இடி) முடக்கியுள்ளது.

ஐடிபிஐ வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது மற்றும் அந்நியச் செலாவணி விதி மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக அவரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

விஜய் மல்லையாவின் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்த ரூ. 34 கோடி, பெங்களூருவில் உள்ள 2,291 சதுர அடி, மும்பையில் உள்ள 1,300 சதுர அடி அடுக்கு மாடிக் குடியிருப்பு, சென்னையில் உள்ள 4.5 ஏக்கர் தொழிற்சாலை வளாகம், கூர்க் பகுதியில் உள்ள காபி தோட்டம் (28.75 ஏக்கர்) மற்றும் பெங்களூருவில் உள்ள கிங் பிஷர் டவர் மற்றும் யுபி சிட்டியில் உள்ள வர்த்தக வளாகம் மற்றும் குடியிருப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இவை மொத்தம் 8.4 லட்சம் சதுர அடி பரப்பு கொண்டவையாகும்.

அமலாக்கத் துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியும் விஜய் மல்லையா இதுவரை நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை அமலாக்கத் துறை நாடியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) 82-ன் கீழ் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மீது பல்வேறு பிடி ஆணை வழக்குகள் உள்ளதாகவும் ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (பிஎம்எல்ஏ) விதி மீறல் வழக்கு உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவர மேலும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மல்லையா கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி இங்கிலாந்து சென்றுவிட்டார். அந்த நாட்டு சட்டங்கள் கடுமையாக இருப்பதால் அவரை இந்தியா அழைத்து வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in