

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 2 இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பண்டிப்போரா மாவட்டம், குரேஸ் பகுதியில் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு அருகில் ராணுவ முகாம் உள்ளது. ராணுவ முகாமை ஒட்டிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை பனிச்சரிவு ஏற்பட்டதில் ராணுவ வீரர்கள் பலர் அதில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 7 வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் மீட்புக்குழுவினர் நேற்று 3 வீரர்களைச் சடலமாக மீட்டனர்.
அதேபோல் குரேஸ் பகுதியின் மற்றொரு இடத்தில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பனிச் சரிவில் ராணுவ ரோந்து குழுவினர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து இங்கும் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “இங்கிருந்து இதுவரை 7 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்” என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் காலை, காஷ்மீரில் 2 இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கந்தர்பால் மாவட்டம், சோனாமார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ மேஜர் அமித் என்பவரும், பண்டிப்போரா மாவட்டம் குரேஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இறந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பனி படர்ந்த மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக புதிய பனிப்பொழிவு தொடர்வதால் அடிவாரப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.