

அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் செய்தார் என்றோ அல்லது அவர் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு செய்தார் என்றோ தான் எப்போதும் சொல்லியதில்லை என சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால் நிதி முறைகேடு குறித்து அன்னா ஹசாரே பேசியதாக வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், ஹசாரே இதனை தெரிவிதுள்ளார்.
மேலும், தனக்கும் அரவிந்த கேஜ்ரிவாலுக்கும் இடையே சண்டை, எங்களுக்கு இடையே பிரச்சினை வலுத்துள்ளது என யாராவது கூறினால் அது முற்றிலும் தவறானது.
நான் எப்போதுமே பண விவகாரங்களில் ஒதுங்கியே இருந்துள்ளேன். சர்ச்சையை எழுப்பியுள்ளதாக கூறப்படும் அந்த வீடியோவில் நான்: " ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்காக பல கோடி ரூபாய் பணம் வசூலாகியுள்ளது, ஆனால் அதிலிருந்து நான் ஐந்து ரூபாய் கூட எடுத்ததில்லை" என்றே தெரிவித்திருந்தேன். அதில் நான் அரவிந்த் கேஜ்ரிவால் எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டதாகக் கூறவேயில்லை.
"ஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கான செயல்பாடுகளின்போது, நிதி சார்ந்த நடவடிக்கைக்காக எனது பெயரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டன. அவை தொடர்பாகவே விளக்கம் கேட்டுள்ளேன். இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளதால் விளக்கம் கேட்டுள்ளேன் என்றார்.
முன்னதாக நேற்று மகாராஷ்டிராவின் ரலேகான் சித்தியில் செய்தியாளர்களுடன் பேசிய அன்னா ஹசாரே, "நாங்கள் எதிரிகள் அல்ல... அவர் என்னுடன் பேச விரும்புகிறாரா என எனக்குத் தெரியாது. அரவிந்த் கேஜ்ரிவாலுடன் நான் பேசத் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.