Published : 29 Dec 2013 08:23 PM
Last Updated : 29 Dec 2013 08:23 PM

மோடி 2014 தேர்தலுக்காக 2002 கலவரத்துக்கு வருந்துகிறார்: சிபல் தாக்கு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை மனதில்வைத்து, 2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்துக்காக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வருந்துவதாக, மத்திய அமைச்சர் கபில் சிபல் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

குஜராத் கலவரத்தின்போது தனக்கு ஏற்பட்ட வேதனையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதுநாள்வரை குஜராத் கலவரம் தொடர்பான ஊடகங்களின் கேள்விகளை மோடி பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அந்த கலவரம் தொடர்பாக அவர் வருத்தமோ, மன்னிப்போ கோரவில்லை என்று கூறப்படும் நிலையில் முதல்முறையாக அவர் மனம் திறந்தார்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தனது இணையதள வலைப்பதிவில் அவர் மிக உருக்கமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அதில், '2002-ம் ஆண்டில் கலவரம் வெடித்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டனர். குடும்பங்கள் நிர்க்கதியாக தெருவில் நின்றன. சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அப்போது என்னுடைய இதயம் உலுக்கப்பட்டது. எனக்கு ஏற்பட்ட மனவலியை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. மனிதாபிமானமற்ற அந்த சம்பவத்தை “துயரம், சோகம், துன்பம், வலி, வேதனை, கடும் துயரம், மரண வேதனை” என எந்த வார்த்தைகளால் குறிப்பிட்டாலும் மனத்துயரம் ஆறாது' என்று மோடி விவரித்திருந்தார்.

இந்த நிலையில் மோடியின் வலைப்பதிவுக் கட்டுரையை இன்று கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் கபில் சிபல், "மோடி தன் இதயம் உலுக்கப்பட்டதாகக் கூறியிருப்பது மிகவும் காலம் கடந்த கருத்து. அப்போதே தனது மனநிலையைச் சொல்லாமல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகச் சொல்லியிருக்கிறார். மக்களிடம் அனுதாபத்தைப் பெறுவதற்கே இவ்வாறு சொல்கிறார்.

நம் மனதின் வலி என்பது உனடியாக வெளிப்படக் கூடியது. 11 ஆண்டு கால மெளனத்துக்குப் பிறகு, அது வெளிப்படாது. ஒருவேளை 11 ஆண்டுகளாக வலியால் மெளனமாக இருந்தவர், இனியும் அப்படியே இருந்திருக்க வேண்டும்.

நியூட்டனின் விதியை நம்புவோர், எதிர்வினைபுரிவதற்கு 11 ஆண்டு காலம் காத்திருக்க மாட்டார்கள். தற்போது குற்றவாளிகளாக நிற்பவர்களுக்காக குஜராத் மாநில அரசு துணைநின்றபோது எங்கே போனது 'வலி'?" என்றார் கபில் சிபல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x