உளவுத்துறை வியூகத்தால் ஐ.எஸ். அமைப்பில் இணைந்த இந்திய இளைஞர் மீட்பு

உளவுத்துறை வியூகத்தால் ஐ.எஸ். அமைப்பில் இணைந்த இந்திய இளைஞர் மீட்பு
Updated on
2 min read

இராக்கில் போர் புரியும் ஐ.எஸ். அமைப்பில் இணைந்த மும்பையை சேர்ந்த இளைஞர், உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் முயற்சிகளின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள தானே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆரிஃப் மஜீத், ஃபகத் ஷேக், அமான் தந்தல், சஹீம் தன்கி திடீரென மாயமாகினர்.

இவர்களில் ஆரிஃப் மஜீத் என்ற இளைஞர் கடந்த மே மாதம் இந்தியாவிலிருந்து வெளியேறி இராக்கில் தனி நாடு அமைக்கும் நோக்கத்தோடு போர் நடத்திவரும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் இயக்கத்தில் இணைதார் எனவும், இந்த நிலையில் அவர்களில் ஓர் இளைஞர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதம் 25-ஆம் தேதி இராக் தலைநகர் பாக்தாதில் ஜிகாதிகள் அமைப்புகளில் இணைவதற்காக சென்ற 40 பேர் கொண்ட குழுவில் இந்த 4 இளைஞர்களும் அடங்குவர்.

மே 31-ஆம் தேதி இராக் சென்றடைந்த அவர்கள் அங்கிருந்து வாடகை கார் மூலம் ஐ.எஸ். பிடியில் இருக்கும் மொசூல் நகரத்தை அடைந்தனர். அப்போதிலிருந்து தொலைந்து போனவர்களாக அவர்களது குடும்பத்தால் கருதப்பட்ட அந்த 4 இளைஞர்களும் ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக உளவுத்துறையால் சந்தேகிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஆகஸ்ட் 26-ஆம் தேதி சஹீம் தன்கி என்ற இளைஞர் ஆரிஃப் மஜீத்தின் சகோதரருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு இராக்கில் நடந்த குண்டுவெடிப்பில் ஆரிஃப் பலியானதாக தகவல் தெரிவித்தார்.

ஆனால் இந்த தகவல் வந்த சில தினங்களில் ஆரிஃப் தனது தந்தையை தொடர்புகொண்டு, தான் பத்திரமாக இருப்பதாகவும் உயிரை காப்பாற்றிக்கொள்ள துருக்கியில் பதுங்கியிருப்பதாகவும் விரைவில் நாடு திரும்ப விருபுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது முதல் உள்துறை அமைச்சகம் இராக்கில் சிக்கிய இந்த 4 இளைஞர்களை பத்திரமாக மீட்க வேண்டியதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து இது தொடர்பான நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு பிரிவும் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படையினரும் இணைந்து மேற்கொண்டு வந்தனர்.

"இளைஞர்கள் 4 பேர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் புகார் அளித்தது முதல் அவர்களது குடும்பத்தினரை நாங்கள் தீவிரமாக கண்கானித்து வந்தோம். அப்போது தான் ஆரிஃப் அவரது தந்தையை தொடர்பு கொண்டு தான் நாடு திரும்ப விரும்புவதாக கூறினார். அந்த உரையாடல் குறித்து ஆரிஃபின் தந்தையும் தேசிய புலனாய்வு பிரிவி அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டார். அதன் மூலம் அவர் ஐ.எஸ். இணையும் நோக்கத்தோடு தான் இராக் சென்றார் என்பதில் நாங்கள் தெளிவடைந்தோம்.

ஆரிஃப் மீது வழக்கு பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் இருந்தும், இந்த விவகாரத்தை நாங்கள் அந்த நோக்கத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. போதுவாக இளம் வயதினர் சிலர் இது போன்ற கிளர்ச்சி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு பாதிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்க வேண்டும்.

இதன் மூலம் இது போன்ற இளைஞர்கள் மீது சமூகத்துக்கு தவறான பார்வை வந்துவிடக் கூடாது என்ற புரிதலோடு நாங்கள் இருந்தோம். இதனால் ஆரிஃப் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனையே நாங்கள் உள்த்துறை அமைச்சகத்துக்கும் பரிந்துரைத்தோம்.

அதனை அடுத்த அவரது தொலைப்பேசி எண் துருக்கியில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதனை அடுத்து அவரை மீட்டு கொண்டு வர தூதரக ரீதியில் நாங்கள் முயற்சி எடுத்தோம்" என்று தேசிய புலனாய்வு மைய அதிகாரி தி இந்துவிடம் கூறினார்.

மேலும், தற்போது மீட்கப்பட்ட ஆரிஃபிடம், அவர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டதற்கான காரணங்களையும் நாட்டை விட்டு வெளியேற தூண்டிய விவரத்தையும் விசாரித்து வருகிறோம். முதற்கட்டமாக இளைஞர்கள் மூளைசலவை செய்யப்படுவது உறுதியாக தெரிகிறது. தவிர, இந்தியாவில் அந்த இயக்கத்துக்கு ஆள்சேர்க்கைகான பணிகளை யார் செய்து வருகிறார்கள்? என்று கண்காணித்து வருகிறோம். அவர்களை கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் 'தி இந்து' பத்திரிகையிடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in