

பிஹாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேடு தொடர்பாக அம்மாநிலத்தின் தேர்வு வாரிய எழுத்தர் ராம் புஜாவன் ஜாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேடு தொடர்பாக கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது’’ என்றார்.
இதைத் தொடர்ந்து ஜா 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் இந்த முறைகேடு தொடர்பாக பிஹார் பள்ளி தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரது மனைவி உஷா சின்ஹா ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
மேலும் முறைகேட்டில் ஈடுபட்டு முதலிடம் பிடித்த மாணவி ரூபியும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.