தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதச் சாயம் பூசுகிறார் மோடி: மாயாவதி குற்றச்சாட்டு
தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவும் பிரதமர் மோடியும் ஜாதி, மதச் சாயம் பூசுகின்றனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உணர்ந்த பாஜகவும், பிரதமர் மோடி உள்ளிட்ட அதன் மூத்த தலைவர்களும் கடந்த சில தினங்களாக தேர்தல் பிரச்சாரத்தின்போது தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகள் மற்றும் இடுகாடு, தகன மேடை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பிரதமர் மோடி பேசி உள்ளார். இந்தக் கருத்துகள் சமுதாய மக்களிடையே ஜாதி, மதச் சாயம் பூசும் நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது.
இந்தக் கருத்தைக் கூறுவதற்கு முன்பு, மத்தியப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலைமையை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர் கூறுவது போன்ற வசதிகளை முதலில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்படுத்தி விட்டு பின்னர் இங்கு அதுபற்றி பேச வேண்டும்.
பாஜகவின் இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துகள் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பேசும்போது, ''ரம்ஜான் பண்டிகையின் போது மின்சாரம் இருந்தால், தீபாவளி பண்டிகையின்போதும் கண்டிப்பாக மின்சாரம் துண்டிக்கப்படக் கூடாது. இதில் பாரபட்சமும் இருக்கக் கூடாது. ஒரு கிராமத்தில் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்காக நிலம் ஒதுக்கப்பட்டால், தீயிட்டு கொளுத்துவதற்கும் நிலம் ஒதுக்கப்பட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
