

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் குடியரசு தின உரையில், 'அராஜகம்' குறித்து கருத்து தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் புதிய விவாதம் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரையில், ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
"மக்களிடையே பேராதரவைப் பெற்றிருந்தாலும் அராஜகவாதிகளாக இருந்தால், அவர்கள் ஆட்சி நிர்வாகத்துக்கு ஏற்றவர்கள் அல்ல. தங்கள் மனம்போன போக்கில் வாக்குறுதிகளை அளிக்க தேர்தல் யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. எது சாத்தியமோ, அதைப் பற்றி மட்டுமே வாக்காளர்களுக்கு உறுதி தர வேண்டும்.
அரசாங்கம் என்பது அறப் பணிகளுக்காக பழைய பொருள்களை விற்று நிதி திரட்டும் வேலை செய்வதல்ல. பொய் வாக்குறுதிகள் தருவது மக்களிடம் ஏமாற்றத்தையே தரும். அது கட்டுப்படுத்த முடியாத கோபமாக மாறும். அது ஆட்சியில் உள்ளவர்களைத்தான் குறிவைக்கும்" என்று பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.
குடியரசுத் தலைவரின் இந்தக் கருத்தை பாரதிய ஜனதா கட்சி வெகுவாக வரவேற்றுள்ளது. இதனை, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இதனிடையே, "நாட்டின் முதல் குடிமகன் என்ற முறையில், உரையில் அவர் சொன்னவை பற்றி கருத்து கூற விரும்பவில்லை. எங்களைப் பற்றி அவர் ஏதாவது சொல்லி இருந்தால், அவற்றை கவனமாக கருத்தில் கொண்டு பரிசீலிப்போம்" என்று பத்திரிகையாளராக இருந்து ஆம் ஆத்மியின் இணைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் அஷுதோஷ் கூறினார்.
அதேவேளையில், அராஜகம் பற்றி குடியரசுத் தலைவர் சொன்னது தேசத்தை குறித்தே ஆகும். குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களையும் கவனத்தில் கொண்டுதான் இவ்வாறு சொல்லி இருப்பார்" என்று ஆம் ஆத்மியின் மற்றொரு மூத்த தலைவரான யோகேந்திர யாதவ் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், டெல்லியில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் குடியரசு தலைவர் உரை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது, "ஒரு முதல்வரின் தர்ணா போராட்டம் அரசியலமைப்பில் உகந்ததா இல்லையா என்பது குறித்து விவாதம் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
செய்தித்தாள்களைப் பாருங்கள். சிலர் ஆதரவும், சிலர் விமர்சனமும் செய்கின்றனர். ஓர் ஆரோக்கியமான விவாதம் என்பது ஜனநாயகத்துக்கு நல்லதே" என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.