

சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி-பாபர் மசூதி விவகாரத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, “இந்திய தொல்லியல் கழகம் இந்த இடத்தில்தான் ராமர் கோவில் இருந்ததாக ஆய்வில் தெரிவித்த பிறகு, அயோத்தியில்தான் ராமர் கோவில் கட்ட முடியும்.
இந்த இடத்தில் இருந்த கோவில் தகர்க்கப்பட்ட பிறகே பாபர் மசூதி அங்கு கட்டப்பட்டுள்ளது, இந்துக்கள் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டால் சரி, இல்லையெனில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாங்கள் சட்டமியற்றுவோம், அதுவும் 2018-ல் மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடைத்து விடும்.
முஸ்லிம் சமூகத்தினர் ராமர் கோவில் கட்ட சுமுகமான தீர்வுடன் வந்தால் நாங்கள் அவர்களைப் பாராட்டுவோம். இல்லையெனில் ஷா பானு வழக்கில் ராஜீவ் காந்தி கையாண்ட வழிமுறைகளைக் கையாள்வோம்.
மதுரா, காசி, அயோத்தி ஆகிய 3 இடங்களில் மட்டும்தான் முஸ்லிம் சமூகத்தினர் இடத்தைக் காலி செய்ய நாங்கள் கேட்டு வருகிறோம். இந்த சர்ச்சைக்குரிய இடங்கள் 2024-ம் ஆண்டு வாக்கில் சர்ச்சைகள் தீர்ந்த இடமாகிவிடும்.
பிரச்சினைக்கு முஸ்லிம் தலைவர்கள் இருதரப்பு பேச்சு வார்த்தைகளுக்கு ஒப்புக் கொள்ளவில்லை, உச்ச நீதிமன்ற தலையீடு கோரியுள்ளனர்” என்றார்.