Published : 06 Jan 2017 08:00 AM
Last Updated : 06 Jan 2017 08:00 AM

5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை மத்திய பட்ஜெட்டை ஒத்திவைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில், மத்திய பட்ஜெட்டை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத் தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள் ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி நிறைவடைய உள்ளது. முதல் நாளில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார். அதேநாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் பகுதிக்குப் பிறகு மார்ச் 9-ல் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 13-ல் நிறைவடையும் என்று தெரிகிறது.

தேர்தல் ஆணையத்திடம் புகார்

இந்நிலையில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நேற்று நேரில் சென்று மனு அளித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மத்திய பட்ஜெட்டை ஒத்தி வைக்கு மாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவை காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத் கூறும்போது, “வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தேர்தல் நியாயமானதாகவும் நேர்மை யானதாகவும் இருக்காது. எனவே தேர்தல் முடியும் நாளான மார்ச் 8-ம் தேதிக்குப் பிறகு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணை யத்தில் மனு அளித்துள்ளோம்” என்றார்.

ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறும் போது, ‘‘12-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத் திடம் மனு அளித்துள்ளோம். மத்திய பட்ஜெட் மூலம் வாக்காளர்களை கவர பாஜக அரசு முயற்சி மேற்கொள்ளும். இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும்’’ என்று தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் நேற்று முன்தினம் இதே குற்றச்சாட்டை முன்வைத் தார். பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும் எதிர்க்கட்சிகளின் கருத்தை ஆதரித் துள்ளார். 5 மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கு மாறு குடியரசுத் தலைவரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடதுசாரி கட்சிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, ‘பட்ஜெட் மூலம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் அடைய பாஜக முயற்சிக் கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து இடதுசாரி தலைவர்கள் நேற்று தேர்தல் ஆணையத்துக்கு செல்லவில்லை.

மத்திய அரசு விளக்கம்

‘தேர்தலுக்காக பட்ஜெட்டை ஒத்தி வைக்கத் தேவையில்லை, அவ்வாறு ஒத்திவைத்தால் மற்ற மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும்’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘மத்திய பட்ஜெட் அரசியல் சாசன கடமை. பட்ஜெட் தாக்கல் குறித்து திடீரென முடிவு எடுக்கப்பட வில்லை. நன்கு திட்டமிடப்பட்டு முன்னரே அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் எவ்வளவு விமர்சித்தாலும் பரவா யில்லை. திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

பாஜக தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறும்போது, ‘உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி யும் உத்தராகண்டில் காங்கிரஸும் ஆட்சியில் உள்ளன. இரு மாநில அரசுகளும் கடந்த 5 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க அந்தக் கட்சிகள் அஞ்சுகின்றன’ என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையர் கருத்து

இந்த விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதியிடம் நேற்று முன்தினமே நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும்போது, “மத்திய பட்ஜெட்டை ஒத்திவைக்கு மாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x