

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு இலவச கேள்வித்தாள் புத்தகங்களை வழங்கி, புதுவை காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது.
புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாமக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் ஓமலிங்கமும், பாமக சார்பில் அனந்தராமனும் கட்சி வேட்பாளர்களாக உள்ளனர். மத்திய, மாநில ஆளும் கட்சிகளான காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூட்டணியோ, வேட்பாளரோ இறுதி செய்யப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியானது தொகுதிபொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை நடத்திவருகிறது. அத்துடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் நாராயணசாமி அறிவிக்கப்பட வேண்டும் என கட்சியிலுள்ள அனைத்து பிரிவினரும் மேலிடத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக பொதுத்தேர்வு வினாத்தாளை தற்போது காங்கிரஸ் கட்சியினர் வழங்கி வருகின்றனர்.
"நம்பிக்கை - 2014" என்ற தலைப்பிட்டுள்ள இந்த புத்தகத்தின் முன் அட்டையில் ராகுல், சோனியா, மன்மோகன்சிங், நாராயணசாமி படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பின் அட்டையில் லோக்பால் மசோதா தொடர்பான தகவல்கள் உள்ளன. இப்புத்தகத்தை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ளதாக அதில் அச்சிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் அனைத்துப் பாடப்பிரிவிலும் கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பு இந்நூலில் உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, "பொதுத்தேர்வு எழுதும் 10-ம்
வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கிராமப் பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் இந்நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச வினாத்தாள் புத்தகத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் தருகிறோம். இதில் மத்திய அரசு செயல்படுத்திய திட்ட விவரங்களை தெரிவித்துள்ளோம். புதுவைக்கு விடப்பட்ட ரயில் சேவை விவரங்கள் உள்ளன. இது மக்களை எளிதில் சென்றடையும். இதுவரை ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் அச்சிட்டு விநியோகித்துள்ளோம்" என்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் தரும் இலவச வினாத்தாள் புத்தகங்களில், தங்களின் பிரச்சார வாசகங்களையும் இடம்பெறச்செய்து, வீட்டிலுள்ள வாக்காளர்களைக் கவரும் முயற்சியைத் தொடங்கியுள்ளது புதுவை காங்கிரஸ்.