

ஆங்கில மருத்துவர் மன்னே ரவீந்திரா 47 வருடங்களாக ஆந்திர பழங்குடியின மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளித்து வருகிறார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது மரத்தடியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த 'மக்கள் மருத்துவமனை' பிரகாசம் மாவட்டத்தின் மண்டல் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கிறது.
மருத்துவமனைக்கு வெளியே மரக்கிளைகளில் சலைன் பாட்டில்கள் தொங்க விடப்பட்டு இருக்கின்றன. படுக்கைக்குப் பதிலாக கட்டில்கள் போடப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான பழங்குடி இன மக்கள் இருக்கின்றனர். ஆந்திராவின் நல்லமல்லா மலையைச் சேர்ந்த செஞ்சு மற்றும் சுகாலி பழங்குடியினர்கள் அவர்கள்.
யார் இந்த மருத்துவர்?
குண்டூர் மருத்துவக் கல்லூரியில் 47 ஆண்டுகளுக்கு முன்னாள் மருத்துவம் படித்தவர் ரவீந்திரா. அப்போதிலிருந்து சேவை உள்ளத்தோடு உயிரைக் காப்பாற்றும் ஏராளமான அறுவை சிகிச்சைகளை இலவசமாகச் செய்து வருகிறார்.
சிகிச்சை குறித்துப் பேசும் மருத்துவர் ரவீந்திரா, ''சத்துக்குறைபாடு கொண்ட பழங்குடியின மக்களின் பெரும்பாலான பிரச்சினை மலேரியா மற்றும் காசநோயாகவே இருக்கிறது. இவர்கள் பெரிய பூனைகள் மற்றும் காட்டு மிருகங்கள் அதிகம் உலாவும் நாகார்ஜுனசாகர் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய குக்கிராமங்களில் வசிக்கின்றனர்.
சமதளங்களில் வசிக்கும் மக்களுக்கு நீரிழிவும், ரத்த அழுத்தமும் அதிகம் ஏற்படும் சூழலில், மலைவாழ் மக்களுக்கு அரிதாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன.
ஏராளமான நோயாளிகள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் மயங்கும் நிலையில் சிகிச்சைக்காக வருவர். அவர்களுக்கு மரக்கிளைகளில் சலைன் பாட்டில்களைத் தொங்கவிட்டு சிகிச்சை அளிக்கிறோம்.
மரங்களின் அடியில் சிகிச்சை
நான் குணப்படுத்தி விடுவேன் என்ற நம்பிக்கையோடு வரும் நோயாளிகளை என்னால் ஏமாற்ற முடியாது. அதனால்தான் எங்கள் மருத்துவமனையின் ஒவ்வொரு அங்குலமும் மக்களால் நிரம்பி இருக்கிறது. மரங்களின் புதல்வர்களாகத் தங்களை அழைத்துக் கொள்ளும் செஞ்சுக்கள் மரங்களின் அடியில் சிகிச்சை பெறுவதையே விரும்புகிறார்கள்'' என்கிறார்.
மக்கள் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்க விரும்புவர்களுக்கு மருத்துவமனையை ஒட்டிய தனியார் கட்டிடங்களில் ஒரு படுக்கைக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரவீந்திராவின் மருத்துவமனையில் இடமில்லாதபோது ந்த வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது.
தெலங்கானாவின் மஹபூபா நகர், நல்கோண்டா மற்றும் ரங்கரெட்டி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு வந்து, குறைந்த செலவில் சிகிச்சை பெற்று, குணமடைந்து செல்கின்றனர்.