

ஆந்திர மாநிலத்தில் கிராமம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர் தத்தெடுத்தார்.
மும்பையிலிருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் சென்னை வந்த சச்சின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கிருஷ்ண பட்டினம் துறைமுகத்துக்கு வந்தார். இவருக்கு மாவட்ட இணை ஆட்சியர் ரேகா ராணி மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடிய அவர் அன்று இரவு துறைமுக விடுதியில் தங்கினார்.
நேற்று காலையில் புட்டம்ராஜு கண்டிகை கிராமத்துக்கு சென்ற சச்சினை வழி நெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் வரவேற்றனர். அங்கு இவரை ஆந்திர மாநில நகர வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அந்த கிராமத்தை தத்தெடுத்ததற்கான கல்வெட்டை சச்சின் திறந்து வைத்தார்.
பிறகு ரூ. 2.79 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த சிவய்யா என்பவரின் பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்பதாக வாக்குறுதி அளித்தார்.
இதனை தொடர்து, அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் குஞ்சுகளை விட்டு மீன் வளர்ப்புத் தொழிலை தொடங்கி வைத்தார். பின்னர் கிராம மக்களிடையே சச்சின் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று உங்கள் கிராமத்தை தத்தெடுத்துள்ளேன். இதன்படி, பள்ளி கட்டிடம், விளையாட்டு மைதானம், சிமெண்ட் சாலைகள், நிரந்தர குடிநீர் வசதி, தெரு விளக்குகள் போன்றவை அமைக்கப்படும். குறிப்பாக குடிசை இல்லாத கிராமமாக மாற்றப்படும். அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை இருப்பது கட்டாயமாகும். நீங்கள் புகையிலை, மது போன்ற தீய பழக்கங்களை கைவிட்டு குடும்பத்தை நேசிக்க வேண்டும். குப்பைகளை தெருவில் வீசாதீர்கள். குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள்.இவ்வாறு சச்சின் கூறினார்.
நெல்லூர் மாவட்டம், புட்டம் ராஜு கண்டிகை கிராமத்தை நேற்று தத்தெடுத்த பிறகு பள்ளி மாணவர்களுடன் சச்சின் டெண்டுல்கர்.