டெல்லியில் அவலம்: இறந்த மகனின் உடலுடன் 4 நாட்கள் கழித்த தாய்

டெல்லியில் அவலம்: இறந்த மகனின் உடலுடன் 4 நாட்கள் கழித்த தாய்
Updated on
1 min read

புதுடெல்லியில் தனது மகன் இறந்து போனது தெரியாமலேயே 4 நாட்கள் அவரது சடலத்துடன் இருந்துள்ளார் 54 வயது தாயார் ராம்துலாரி.

புதுடெல்லியின் காலிபாரி பகுதியில் நடந்த இச்சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்மணி பசி பயங்கரமாக எடுக்க தனது மகள்களுக்கு திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கடுமையான துர்நாற்றம் அடிக்க, உள்ளே பார்த்தால் சகோதரன் கபில் (32) இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கபில் இறந்து சுமார் 4 நாட்கள் ஆகியிருந்தது.

சில காலம் முன்பு மூளையில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் தாயார் ராம்துலாரிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது, அதன் பிறகே அவர் மனநிலை பிறழ்ந்து காணப்பட்டார். இதனால் அவருக்கு வாசனை முகரும் சக்தி முற்றிலும் இல்லாமல் போனது, பேச்சும் துண்டு துண்டாக ஒரு கோர்வை இல்லாமல் ஆனது.

முகரும் தன்மை இல்லாமல் போனதால் தனது மகனின் சடலத்திலிருந்து வரும் நாற்றம் கூட அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இறந்த கபில் கொஞ்சமாகவே உணவு எடுத்துக் கொள்வார் என்றும் கடுமையாக மதுபானம் அருந்தக் கூடியவர் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கத்தினால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டும் அவரால் குடியை நிறுத்த முடியவில்லை. இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று கட்டிலிலிருந்து கீழே விழுந்ததால் கபில் உயிரிழந்துள்ளார். இவரது பிரேதப் பரிசோதனையும் இதனை உறுதி செய்ததால் இதில் எதுவும் குற்றத் தொடர்புகள் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

தாயார் ராம்துலாரிக்கு வேண்டிய உணவுப்பொருட்களை வாங்கி குளிர்பதனப் பெட்டியில் வைப்பது கபிலின் வழக்கம். இந்நிலையில் தனக்கான உணவு தீர்ந்து விட்ட நிலையில் பசி வயிற்றைப் பிசைய தாயார் ராம்துலாரி தனது மகனை அழைத்துள்ளார் ஆனால் பதில் இல்லை, மகன் இறந்துபோனது இவருக்குத் தெரியவில்லை.

இந்நிலையில் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து அண்டை விட்டுக்காரர் ஒருவரை அணுகி மகளிடம் தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளார். சில நாட்களாக நான் சாப்பிடவில்லை என்று மகளிடம் தாயார் தெரிவிக்க 3 மகள்களும் வீடு வந்தனர், ஆனால் அவர்கள் எதிர்கொண்டது பிண நாற்றத்தையே. உள்ளே சென்று பார்த்த போது அங்கு சகோதரன் கபிலின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மகன் வழக்கம் போல் மது அருந்திவிட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக தாயார் நினைத்து விட்டார். முகரும் சக்தியை இழந்ததால் துர்நாற்றமும் தெரியவில்லை.

ராம்துலாரியின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பாக காலமானார், மகள்கள் 3 பேரும் திருமணமாகி டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளனர். தாயார் ராம்துலாரியும் மகன் கபிலும் மட்டும் அரசு குடியிருப்பில் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in