

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நில ஆக்கிர மிப்பாளர்கள் - போலீஸார் இடையே நடந்த மோதலில் மாவட்ட எஸ். பி. உட்பட 24 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் என்ற பகுதி உள்ளது. 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடம் மாநில தோட்டக் கலை துறைக்குச் சொந்தமானதாகும். ஆசாத் பாரத் விதிக் வைசாரிக் கிராந்தி சத்யாகிரஹி என்ற அமைப்பினர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்ணா என்ற போர்வையில் ஜவஹர் பாக் பகுதியை ஆக்கிரமித்தனர்.
சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறிக் கொள்ளும் அவர்கள் ‘போஸ் சேனா’ என்று அழைக்கப்படுகின்றனர். அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் அங்கு கூடாரங்கள் அமைத்து குடியிருந்து வந்தனர்.
இதுதொடர்பாக லக்னோ உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 16-ம் தேதிக் குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற அரசு தரப்பில் கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கிருந்து வெளி யேறவில்லை.
இதைத் தொடர்ந்து மே 31-க்குள் இடத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடைசி கெடு விதிக்கப்பட்டது. அதையும் அவர்கள் ஏற்க வில்லை. தொடர்ந்து அங் கேயே முகாமிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி. முகுல் திரிவேதி தலை மையிலான போலீஸார், ஜவஹர் பாக் பகுதிக்குச் சென்று ஆக்கி ரமிப்பாளர்களை வெளியேற அறிவுறுத் தினர்.
அப்போது போலீஸாருக்கு எதிராக ஆக்கிரமிப்பாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத் தினர். அப்போது மரங்களில் மறைந்தி ருந்த சிலர் போலீஸாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் முன்வரிசையில் நின்றிருந்த எஸ்.பி. முகுல் திரிவேதி, இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சில மணி நேரங்களில் உயிரிழந்தனர்.
போலீஸார் மீது தாக்குதலை தீவிரப்ப டுத்திய ஆக்கிரமிப்பாளர்கள் கையெறி குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் அங்கு கூடாரங்களில் வைக்கப் பட்டிருந்த சமையல் காஸ் சிலிண்டர்கள் மீது விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
கலவரம் கட்டுக்கடங்காமல் சென்ற தால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத் தினர். இதில் 11 ஆக்கிரமிப்பாளர்கள் பலியாயினர். கையெறி குண்டு, சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.
116 பெண்கள் கைது
சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கலவரம் முழுமை யாக கட்டுப்படுத்தப்பட்டது. அங்கிருந்து 47 கைத்துப்பாக்கிகள், 178 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. 116 பெண்கள் உட்பட 320 பேர் கைது செய்யப்பட்டனர்.
போஸ் சேனாவின் தலைவராக செயல்பட்ட ராம் விரக் ஷா யாதவ் உட்பட அந்த அமைப்பின் மூத்த தலை வர்கள் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதல்வர் அகிலேஷ் விளக்கம்
இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பதாவது:
மதுரா சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த போலீஸார் தகுந்த முன்னெச்சரிக்கையு டன் சென்றிருக்க வேண்டும். அவர்கள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை வைத்திருந்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரியாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த எஸ்.பி. குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுரா கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் அகிலேஷ் யாதவை தொலை பேசியில் தொடர்பு கொண்டு விவ ரங்களைக் கேட்டறிந்தார்.
டிஜிபி ஆய்வு
கலவரம் நடந்த பகுதியை உத்த ரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஜாவித் அகமது நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆக்கிரமிப்பாளர்களுடன் நடந்த மோதலில் போலீஸ் தரப்பில் 23 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 320 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.