Published : 04 Feb 2015 11:58 AM
Last Updated : 04 Feb 2015 11:58 AM

கடும் எதிர்ப்பு எதிரொலி: சர்ச்சைக்குரிய ஏஐபி நாக் அவுட் வீடியோ நீக்கம்

ஆபாச வார்த்தைகள், எல்லைமீறிய கேலி என முழுக்க முழுக்க அநாகரிகக் காட்சிகள் நிறைந்திருக்கின்றன என்று சர்ச்சைக்குள்ளான ஏ.ஐ.பி நாக் அவுட் நிகழ்ச்சியின் வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்களுக்கு ராஜ் தாக்கரே கட்சி உள்ளிட்ட பல தரப்பினர் விடுத்த எதிர்ப்பின் எதிரொலியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து நிகழ்ச்சியைத் தயாரித்த "ஆல் இந்தியா பக்சோட்" (All India Backchod) சுருக்கமாக ஏஐபி என்று அழைக்கப்படும் அந்தக் குழு தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏ.ஐ.பி. நாக் அவுட் நிகழ்ச்சியின் வீடியோவை இப்போதைக்கு நீக்கி விட்டோம். விரைவில் இது குறித்து பேசுவோம்" என குறிப்பிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர்கள் அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங், இயக்குநர் கரன் ஜோஹார் ஆகியோர் பங்கேற்ற 'ஏஐபி நாக் அவுட்' என்ற நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை ஓர்லி பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ அண்மையில் யூ டியூபில் வெளியானது. இதனை லட்சக் கணக்கானோர் பார்த்தனர். ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் ஏ.ஐ.பி. நிகழ்ச்சி குறித்த பதிவுகள் டிரெண்டாகத் தொடங்கின.

இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. "கலாய்ப்புகளுக்கும் எல்லை இருக்கிறது. தரக்குறைவான வார்த்தைகளால் பொது மேடையில் ஒருவொருக்கொருவர் வசைபாடிக் கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள் அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங், இயக்குநர் கரன் ஜோஹார் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா எச்சரித்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஜிதேந்திரா அஹ்வாது, ஏ.ஐ.பி. நிகழ்ச்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். "மாநில அரசு தலையிட்டு இத்தகைய நிகழ்ச்சிகளை தடை செய்யாவிட்டால், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை தடுப்போம்" என ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தொடர் எச்சரிக்கைகள் எதிரொலியாக சர்ச்சைக்குள்ளான ஏ.ஐ.பி நாக் அவுட் நிகழ்ச்சியின் வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x