Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM

முடிவுக்கு வந்தது ஆம் ஆத்மி உட்கட்சி பூசல்

அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்குள் வெடித்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்தது.

டெல்லியில் புதிதாக அமைய உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசில் அமைச்சர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. 6 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் தமக்கு இடம் கிடைக்காததால் வினோத்குமார் பின்னி என்பவர் அதிருப்தி அடைந்தார். இதனால் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். எனவே ஆம் ஆத்மி கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டதாக கிளம்பிய சர்ச்சை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, முதல்வராக பொறுப்பேற்க உள்ள அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், ‘பின்னி யைப் பற்றி நேற்று வெளியான சர்ச்சை குறித்து அவரிடம் கேட்ட போது தான் அமைச்சராக வேண்டும் எனக் கூறவில்லை. கட்சியின் பெயரில் நாட்டுக்கு உழைக்கத் தயாராக இருப்பதாக பின்னி தெளிவு படுத்தி விட்டார்’ என்றார்.

இதுபற்றி பின்னியிடம் 'தி இந்து' சார்பில் கேட்டபோது, ‘ஒரு விருந்துக்கு செல்ல வேண்டி இருந்ததால் ஆலோசனைக் கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே கிளம்பிச் சென்றேன். அமைச்சர் பதவி கிடைக்காதது குறித்து கவலை இல்லை. அடுத்து நாடாளுமன்றம், மற்ற மாநில தேர்தல் என பணி அதிகமாக உள்ளது. அதில் பொருத்தமான பணியில் என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கட்சி மேலிடம் நினைத்திருக்கலாம்’ என்றார்.

இதற்கிடையே, கட்சியின் 7 பேரைக் கொண்ட பாராளுமன்ற அரசியல் குழு உறுப்பினர்க ளில் ஒருவராக பின்னி தேர்தெடுக்கப்பட் டுள்ளார்.

இதுகுறித்து கட்சி வட்டாரங்களில் கேட்டபோது, ‘அமைச்சரவையில் சேர்க்காததால் பின்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது உண்மைதான். பின்னர் குமார் பிஸ்வாஸ் மற்றும் சஞ்சய் சிங்கை அனுப்பி அவர் சமாதானப்படுத்தப் பட்டுள்ளார்.

இது தற்காலிகமா, நிரந்தரமா என்பது அடுத்த சில மாதங்களில் தெரிய வரும்’ என்றனர்.

மற்ற கட்சிகளைப் போல் ரகசியம் எதுவும் இல்லை, எல்லாமே வெளிப்படையான செயல்தான் என ஆம் ஆத்மி கட்சி கூறி வந்தது. ஆனால், மூடிய கதவுகளுக்குள் கூட்டம் நடத்தியதற்கான காரணம் என்ன? எனக் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

பின்னியைப் பற்றி...

டெல்லி லட்சுமி நகர் தொகுதியில் காங்கிரஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.கே.வாலியை எதிர்த்து வென்ற பின்னி, அங்கு சுயேச்சையாக டெல்லி நகர சபையின் உறுப்பினராக இருந்த வர். 2009–ல் காங்கிரஸில் சேர்ந்தார். அண்ணா ஹசாரே லோக்பால் போராட்டத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின்னி கேஜ்ரிவாலுடன் சேர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x