

நிதியமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் கேஜ்ரிவாலை மீட்க இலவசமாக வாதாடுவேன் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தனது கட்டணத்தை கொடுக்க முடியாமல் டெல்லி அரசை முடக்கியுள்ளதாக அருண் ஜேட்லி மீது ராம் ஜேத்மலானி கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆம் ஆத்மி தனது குற்றச்சாட்டில், 2ஜி ஊழலில் ஊறிய தனியார் நிறுவனம் ஒன்று வழக்கறிஞராக மிகப்பெரிய தக்கவைப்புத் தொகையை அருண் ஜேட்லிக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளது.
‘பணமில்லை’, ஆம் ஆத்மி அதிகமாக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர்களை நாட முடியாது என்று கூறிய ஜேத்மலானி, “கேஜ்ரிவால் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும் கூட இந்த வழக்கில் அவருக்காக வாதாடுவேன். ஆனால் அவர்தான் இல்லை நான் உங்களுக்குரிய தொகையை கொடுக்க விரும்புகிறேன் என்றார், அதனால் நான் தொகை குறித்த விவரங்களை அளித்தேன், எனவே அரசு அவர் தனது பில்களை செலுத்த முடியாது முடக்கினால் நான் இலவசமாக வாதாடுவேன்.
தேவைப்பட்டால் அவரது வாழ்வாதாராத்திற்குக் கூட நான் உதவுவேன், ஏனெனில் அருண் ஜேட்லியை ஒப்பிடும்போது கேஜ்ரிவால் தூய்மையானவர்” என்றார் ஜேத்மலானி.
ஜேத்மலானிக்குச் சேர வேண்டிய தொகையை அனுப்புமாறு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பொது நிர்வாகத்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், இதற்காக சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்ஜித் குமார் ஆலோசனையை நாடியுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கிற்கான மொத்தத் தொகை ரூ.3.4 கோடி.
இந்நிலையில் ஜேத்மலானி கூறும்போது, “அவரால் பணம் கொடுக்க முடியவில்லை எனில் நான் இலவசமாக வாதாடுவேன், எனது 90% கட்சிக்காரர்களுக்கு நான் கட்டணம் எதையும் வசூலிக்காமல்தான் வாதாடி வருகிறேன்” என்றார்.
இது கேஜ்ரிவாலின் சொந்த வழக்கல்ல, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார்களை அடுத்து டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து எழுந்த வழக்கு. எனவே அரசு இந்த வழக்கை வாதாடும் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
ஆம் ஆத்மி தலைவர் ஆஷிஷ் கேத்தன், இவர் முன்னாள் பத்திரிகையாளரும் கூட, தனது தொடர் ட்வீட்களில், “ஜேட்லி பணக்காரர், அவரால் பணக்கார வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ள முடியும், நரேந்திர மோடி அவர்களே, ஆம் ஆத்மியிடம் பணம் இல்லை, ஆனால் உங்கள் நிதியமைச்சர் பணக்காரர்
உங்கள் நிதியமைச்சர் பெரிய ஊழல்களில் சிக்கிய பெரிய மனிதர்கள் பக்கம் வாதாடி பணம் சேர்த்துள்ளார். கேஜ்ரிவால் தன் வாழ்நாள் முழுதும் ஏழைகளைப் பாதுகாத்தார்” என்று சாடியுள்ளார்.
கேத்தன் மேலும் கூறும்போது, “அனில் அம்பானியும் அவரது நிறுவனங்களும் 2ஜி ஊழலில் ஊறிக்கிடந்த காலத்தில் வழக்கறிஞராக அருண் ஜேட்லிக்கு மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.