

காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாம் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
யூரி ராணுவ முகாம் தாக்குதல் கோழைத்தனமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் தீரத்துடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
முதல்வர் மெகபூபா முப்தி
காஷ்மீரில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். காஷ்மீரில் வன்முறையைத் தூண்டுபவர் களுக்கு ஓர் அறிவுரை. வன்முறை யால் மக்களின் துயரத்தை ஒரு போதும் துடைக்க முடியாது.
சோனியா காந்தி
யூரி தாக்குதல் கோழைத்தன மானது. தாக்குதலில் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
சீதாராம் யெச்சூரி
தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் உடனடி யாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா
யூரி தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா கடுமையாகக் கண்டிக் கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும் பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் கள் மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.