

கிழக்குப் பிராந்திய கடற்படை சார்பில் கடற்படையின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி, பொதுமக்களுக்காக புதன்கிழமை சென்னையில் நடத்திக் காட்டப்பட்டது. இதில், யுத்த காலத்தில் கடற்படை எப்படி செயலாற்றும் என்பது பற்றியும் சாகச நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டப்பட்டன.
இதில் கலந்து கொண்ட கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி அதுல் குமார் ஜெயின், நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவதாக புகார்கள் வருகின்றன. மீனவர்கள் எவரும் இதுவரை இந்திய கடல் எல்லைக்குள் தாக்கப்படவில்லை. மீனவர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தாக இலங்கை கடற்படை கூறுகிறது.
மீனவர்கள் மீதான தாக்கு தலைத் தடுக்க இந்தியக் கடற்படை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறுவது சரியல்ல. 6 மாதத்துக்கு ஒருமுறை இலங்கைக் கடற்படையுடன் இந்தியக் கடற்படைத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஒரு வாரத்துக்கு முன்புகூட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் இலங்கைக் கடற்படையினர் அதே குற்றச்சாட்டைத்தான் முன்வைக்கின்றனர். நமது மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். போன்ற கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்.
வரும் டிசம்பரில் ஜப்பான் கடற்படையுடன் சேர்ந்து கிழக்குப் பிராந்திய கடற்படையினர் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக ஜப்பானில் இருந்து மூன்று கப்பல்கள் வருகின்றன. இந்திய தரப்பிலும் 3 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும்.
தற்போது ‘விராட்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல், மும்பையில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் ‘விக்ரமாதித்யா’ என்ற இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல், கர்நாடகாவில் உள்ள கார்வார் கடற்படைத் தளத்தில் இருந்து இயக்கி வைக்கப்படும். மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் தற்போது கட்டப்பட்டு வருகிறது. அது விசாகப்பட்டினத்தில் இருந்து இயங்கும்.
இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இந்தியக் கடற்படையில் சுமார் 60 புதிய யுத்தக் கப்பல்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. தற்போது கிழக்கு மற்றும் மேற்குப் பிராந்திய கடற்படை இரண்டிலும் 134 யுத்தக் கப்பல்கள் உள்ளன என்றார்..