

உ.பி.யில் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா நடத்தி வரும் பசு வளர்ப்புக் கூடத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பார்வையிட்டார்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ். இவரது முதல் மனைவியின் மகன் அகிலேஷ் யாதவ். இரண்டாவது மனைவி சாதனா குப்தாவின் மகன் பிரதீக் (28). இவரது மனைவி அபர்ணா (26). பிரதீக் அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் உ.பி.யில் சமீபத்தில் நடந்த தேர்தலில் அவரது மனைவியும் முலாயமின் மருமகளுமான அபர்ணா லக்னோ தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் ரீடா பகுகுணா ஜோஷியிடம் தோல்வி அடைந்தார்.
தேர்தல் நேரத்தில் முலாயம் சிங்குக்கும் அகிலேஷ் யாதவுக்கும் இடையில் கருத்து மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. அதற்கு பிரதீக் மற்றும் குடும்பத்தினர்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்நிலையில், பாஜக அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பின் பிரதீக் - அபர்ணா தம்பதி, முதல்வரைச் சந்தித்து பூங் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் பிரதீக். அத்துடன் மனைவி அபர்ணாவுடன் சேர்ந்து மிகப்பெரிய பசு வளர்ப்புக் கூடத்தையும் நடத்தி வருகிறார். தலைநகர் லக்னோவில் உள்ள அந்த பசு வளர்ப்புக் கூடத்துக்கு முதல்வர் ஆதித்யநாத் நேற்று வருகை தந்தார்.
பின்னர் 63 ஏக்கரில் அமைந் துள்ள பசு வளர்ப்புக் கூடத்தைப் பார்வையிட்ட முதல்வர் பசுக்களுக்கு தீனியும் வழங்கினார். அப்போது பிரதீக்கும் அபர்ணாவும் உடன் இருந்தனர். சமாஜ்வாதி கட்சி தற்போது அகிலேஷ் யாதவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, பாஜக.வுடன் அபர்ணா நெருக்கமாகி வருவதையே முதல்வரின் வருகை காட்டுகிறது என்று கட்சியினர் கூறுகின்றனர்.
ஆனால், தனியார் தொலைக் காட்சிக்கு நேற்று பேட்டி அளித்த அபர்ணா, அதை திட்டவட்டமாக மறுத்தார். ‘‘யோகி ஆதித்யநாத் உ.பி. மக்கள் அனைவருக்கும்தான் முதல்வர். அவரும் கோரக்பூரில் பசு வளர்ப்புக் கூடத்தை நடத்தி வருகிறார். எனவே நாங்கள் நடத்தி வரும் பசு வளர்ப்புக் கூடத்துக்கு வருகை தந்து அதை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கும்படி அழைப்பு விடுத்தோம். அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது கூட, எங்கள் பசு வளர்ப்புக் கூடத்துக்கு வருகை தந்தார்’’ என்று பேட்டியில் கூறினார்.
யோகி ஆதித்யநாத்தும் அபர்ணாவும் உத்தராகண்ட் மாநிலம் பவுரி ஊரைச் சேர்ந்தவர் கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மீது அபர்ணா மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். கடந்த ஆண்டு உ.பி.யில் நடந்த கூட்டங்களிலும் அபர்ணா பங்கேற்றார். அத்துடன் கடந்த ஆண்டு முலாயம் சிங் இல்ல விழாவுக்கு வந்த பிரதமர் மோடியுடன் அபர்ணா ‘செல்பி’யும் எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து கேட்டபோது, ‘‘நரேந்திர மோடி எல்லோருக்கு மான பிரதமர்’’ என்று அபர்ணா அப்போது பதில் அளித்தார். இப்போது முதல்வர் வருகை குறித்து அதே கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.