

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் புதனன்று காஷ்மீர் கலவரம், குஜராத் தலித்துகள் மீதான வன்முறை விவகாரங்கள் குறித்து காரசாரமான சொற்போர் நடைபெற்றது.
காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா பாஜக-வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.
“காஷ்மீர் வன்முறைகளின் போது வெளிநாட்டில் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை மரணங்கள் தேவை?
அயல்நாட்டுப் பயணத்தில் இருந்த பிரதமர் மோடிக்கு அமைச்சர்களின் பிறந்த தினத்தன்று வாழ்த்துக்கள் கூற முடிகிறது. பிரான்ஸ், துருக்கி விவகாரங்கள் குறித்து கருத்து கூற முடிகிறது. ஆனால் காஷ்மீர் வன்முறைகள் குறித்து ஒரு வார்த்தைக் கூட உதிர்த்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்” என்றார்.
உடனே குறுக்கிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘சிந்தியாவின் பேச்சு தவறானது’ என்றார். இதற்குப் பதில் அளித்த சிந்தியா, “இவ்வளவு நடந்தும் ஏன் ஒரு மத்திய அமைச்சர் கூட காஷ்மீர் பக்கம் செல்லவில்லை?
நீங்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் போது மிகவும் சூடாக இருந்தீர்கள், ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகு மென்மையாகி விட்டீர்கள்.
பலவிதங்களில் இந்த பாஜக அரசு ஒரு தோல்வியே.
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், காலதாமதமின்றி உடனே நமது எல்லைகளை மீளுங்கள், நம் மக்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள், ஆனால் திட்டமிட்டு செயல்படுங்கள்” என்றார்.
பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் இதற்கு பதில் அளிக்கும் விதமாக, “குற்றஞ்சாட்டுவது எளிது” என்றார்.