

காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அனந்தநாக் மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைக்க பெல்லட் துப்பாக்கிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர். இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
காஷ்மீரில் எந்த ஒரு பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை. ஆனால், 4 பேருக்கு அதிகமானோர் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ள முழுஅடைப்புப் போராட்டத்தால் ஸ்ரீநகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வரை முழு அடைப்பு நடைபெறும் என பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். இருப்பினும் அவ்வப்போது கடைகளை திறக்க அனுமதிக்கின்றனர். அந்த வேளைகளில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கத் திரள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொது போக்குவரத்து இன்னும் முழுமையாக சீரடையவில்லை ஆனால் தனியார் ஆட்டோக்கள், வாகனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. அரசு அலுவலகங்கள், வங்கிகளில் முன்பைவிட அலுவலர்கள் வருகை சற்று அதிகரித்துள்ளது" என்றார்.
கடந்த ஜூலை 8-ம் தேதி இஸ்புல் தீவிரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் இதுவரை 2 காவலர்கள் உட்பட 73 பேர் பலியாகியுள்ளனர்.