டெல்லி எய்ம்ஸில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மரணம் தற்கொலையே: போலீஸ் தகவல்

டெல்லி எய்ம்ஸில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மரணம் தற்கொலையே: போலீஸ் தகவல்
Updated on
2 min read

நாட்டின் சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனமாக, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் கருதப்படுகிறது. இங்கு பட்டமேற்படிப்பு பயின்று வந்த டாக்டர் சரவணன், கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடைசியாக சனிக்கிழமை இரவு சுமார் 12 மணிக்கு தன் பணியை முடித்துக்கொண்டு சரவணன் அறைக்கு திரும்பியுள்ளார்.

மறுநாள் காலை அவர் வழக்கம் போல், வார்டு பணிக்கு வராததால், அவருக்கு போன் செய்து விசா ரிக்கும்படி சரவணனின் சீனியர் கூறியுள்ளார். அவ்வாறு போன் செய்தபோது, சரவணன் தனது போனை எடுக்காமல் இருக்கவே அருகில் வசிக்கும் மற்றொரு மாணவர் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது சரவணன் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இவரது இறப்பில் பல சந்தேகங்கள் எழுந்த பின்பும் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவே டெல்லி போலீஸார் கருதுகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் (ஹோஸ்காஸ் பகுதி) ராஜேந்தர்சிங் பட்டானியா கூறும் போது, “எங்கள் விசாரணையில் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாகவே கருதுகிறோம். ஏனெனில், அவரது இறப்பில் இது வரை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. உடற்கூறு பரி சோதனையின் தொடக்க கட்டத் திலும் எந்த சந்தேகமும் எழ வில்லை. அவரது உடலின் முக்கிய உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறோம்” என்றார்.

எனினும் சரவணன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மாணவர்கள் எழுப்பும் பல்வேறு சந்தேகங் களுக்கு போலீஸார் தரப்பில் பதில் கிடைக்காமல் உள்ளது. இவரது உடலின் வலது கையில் ‘இன்ட்ராவைன் கார்ட்’ எனும் நரம்பில் ஊசி போடுவதற்கான சாதனம் பொருத்தியபடி இருந் துள்ளது. ஆனால் அது மூடப் படாமல் அதன் வழியாக ரத்தம் வழிந்தபடி இருந்துள்ளது.

இந்த சாதனத்தை வலது கை பழக்கம் உள்ளவர்களால் இடது கையில் தாங்களே செலுத்திக் கொள்ள முடியும். ஆனால் சரவணனின் வலது கையில் இந்த சாதனம் உள்ளதால் அவரால் தனக்குத் தானே எப்படி செலுத்தி யிருக்க முடியும் என சந்தேகம் எழுகிறது. இந்த சாதனம் வழியே செலுத்தப்பட்ட மருந்து பொட்டாசியம் குளோரைடு என்றும் அட்ராக்யூரியன் எனவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்த மருந்தின் காலி கண்ணாடி குப்பியும் அங்குள்ள குப்பைகளில் இல்லை. இதை சரவணனுக்கு செலுத்தியவர் யார் என்பதும் இதுவரை விசாரணை செய்ததாகத் தெரியவில்லை.

இதை வெளியில் இருந்து வந்த வரே செலுத்தியிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் வகையில் 2வது மாடியில் உள்ள சரவணனின் அறைக்கதவும் திறந்தபடி இருந் துள்ளது. கடைசியாக வெள்ளிக் கிழமை இரவு சரவணன் தனது பெற்றோரிடம் பேசியுள்ளார். மறுநாள் சனிக்கிழமை அவரை பெற்றோர் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் போனை எடுக்கவில்லை.

மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்த சரவணன் எய்ம்ஸ் நடத்தும் பட்ட மேற்படிப் புக்கான நுழைவுத்தேர்வை கடந்த ஆண்டு எழுதியுள்ளார். மிகச் சிறந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறமுடியும். இதில் அவருக்கு 74-வது ரேங்க் உடன் பேத்தாலஜி பிரிவு கிடைத் துள்ளது. ஆனால் பொது மருத்துவப் பிரிவே சரவணனின் கனவாக இருந்துள்ளது. இதனால் இந்த ஆண்டும் எய்ம்ஸ் தேர்வு எழுதிய அவருக்கு 47-வது ரேங்க் உடன் பொது மருத்துவம் கிடைத்துள்ளது. இதில் ஆர்வமுடன் சேர்ந்து பயின்றவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என சக மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் படிப்புக்கான இறுதி கவுன்சிலிங் வரும் 25-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் சரவணன் இறந்ததால் அவரது பொது மருத்துவ இடம் காலியானதாக அறிவிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சரவணனின் இடத்தை மற்றவர் பெறுவதற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என்றும் எய்ம்ஸ் மாணவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீஸாரிடம் கேட்டபோது அந்த கோணத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என பதில் தருகின்றனர்.

இதற்கிடையே, சம்பவ தினத்தன்று மாலை டெல்லி வந்த சரவணனின் பெற்றோர் கடும் அதிர்ச்சியில் இருந்துள்ளனர். இதனால் அவர்களால் தங்கள் மகனின் மர்ம மரணம் குறித்து யோசிக்க முடியவில்லை. மேலும் அவர்களுக்கு இந்தி மொழி தெரியாததும் ஒரு காரணம். தற்போது அவர்கள் சரவணனின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என திருப்பூர் காவல் நிலையத்திலேயே புகார் அளிக்கலாமா என யோசிப்பதாக அவர்களின் உறவினர்கள் ‘தி இந்து’விடம் தெரிவித்தனர்.

சிபிஐ விசாரிக்க தந்தை வலியுறுத்தல்

சரவணனின் தந்தை கணேசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சரவணன் இறந்த தகவலறிந்து எங்கள் குடும்பத்தில் இருந்து 4 பேர் டெல்லிக்கு விரைந்தோம். பிரேதப் பரிசோதனை முடிந்ததும் சடலத்தைத் தந்து அனுப்பி வைத்தனர். டெல்லி போலீஸார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் மெத்தனமாகவே செயல்பட்டனர். இதனால், மகனின் மரணத்தில் நீதி கிடைக்க வாய்ப்பு இல்லை. இதில் ஒளிந்துள்ள உண்மை களை வெளிக்கொண்டு வர வேண்டும். அது, டெல்லி போலீஸாரால் இயலாது. சிபிஐ தலையிட்டு விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும். சிபிஐ தலையிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

3-ம் கட்ட கலந்தாய்வு கூடாது

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.சாமிநாதன் கூறும்போது, ‘‘சரவணன் மரணம் குறித்து உரிய விசாரணை நடைபெறவில்லை. சரவணன் மரணம் அடைந்ததால், அந்த இடம் காலியாகிவிட்டது. ஆகவே, வரும் ஜூலை 25-ம் தேதி எய்ம்ஸின் 3-ம் கட்ட பொது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதில், உண்மை நிலை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in