

பிரிவினைவாதிகள் மீதான மென்மை யான அணுகுமுறையை கைவிட வேண்டும். அது, காஷ்மீரில் சுற்றுலாவையும், அரசு அலுவல்களையும் பாதிக்கிறது என மெஹபூபா முப்தி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் அரசை பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பைத் திரும்பப் பெற்று, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் வீரேந்திர குப்தா இதுதொடர்பாக கூறியதாவது:
பிரிவினைவாதிகள் மீதான கொள்கையை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, அவர்களை, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (பிஎஸ்ஏ) சமூக விரோத, தேச விரோத நடவடிக்கைகளுக்காகவும் சிறையில் அடைக்க வேண்டும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெறுகின் றன. அவற்றில், பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ் கொடிகள் பறக்கவிடப்படுகின்றன. இவை பிரிவினைவாதிகளின் தூண்டுதலால்தான் நடைபெறுகின்றன. அண்மையில் ஒரு பிரிவினைவாத தலைவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நகரில் தனது பணியைச் செய்துகொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை அறைந்துள்ளார்.
ஒருபுறம் பிரிவினைவாதிகளிடம் மென்மையான அணுகுமுறையைக் காட்டுவது பாதுகாப்பு படையினருக்கு சோர்வை ஏற்படுத்தும். மேலும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ஊக்குவிப்பதாகவும் அமையும். இவர்கள் தொடர்ந்து அமைதியைச் சீர்குலைப்பது இயல்பு வாழ்க்கை, அரசாங்க அலுவல்கள் மற்றும் சுற்றுலாவை பாதிக்கச் செய்கிறது.
இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை மோசமடையும். மக்கள் ஜனநாயக கட்சி- பாஜ கூட்டணி அரசு இதுதொடர்பாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.