Last Updated : 16 Apr, 2017 11:28 AM

 

Published : 16 Apr 2017 11:28 AM
Last Updated : 16 Apr 2017 11:28 AM

பெங்களூருவில் ரூ.14.8 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்: முன்னாள் கவுன்சிலர் தமிழகத்தில் தலைமறைவு?

பெங்களூருவில் உள்ள ஹென் னூரில் வசித்து வரும் தொழிலதிபர் உமேஷ் கடந்த மார்ச் 18-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் கடத்தல்காரர்கள், அவரை மிரட்டி ரூ.50 லட்சத்தை பெற்றுக்கொண்டு விடுவித்தனர். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். ஆனாலும் கடந்த 7-ந் தேதி ஹென்னூர் போலீஸில் உமேஷ் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, உமேஷை க‌டத்தி பணம் பறித்த கும்பலுக்கு பிரபல ரவுடி ‘பாம்' நாகா (எ) நாகராஜுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் னிவாஸ் தலைமையிலான போலீஸார் நீதிமன்ற அனுமதியுடன், ராமபுரத்தில் உள்ள 'பாம்' நாகாவின் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 5 மாடி கொண்ட அவருடைய வீட்டில் பாம் நாகாவின் மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்தனர்.

அப்போது படுக்கை அறை சுவரில் ரகசிய லாக்கர் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதை உடைத்து பார்த்தபோது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப் பட்டிருந்தன. இதேபோல மற்ற அறைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம்,வெள்ளி நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கூரிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணியபோது, ரூ.14 கோடியே 80 லட்சம் இருப்பது தெரியவந்தது.

காந்தியவாதி வேடம்

இதுகுறித்து பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் ஹேமந்த் நிம்பல்கர் கூறும்போது, “பிரபல ரவுடி பாம் நாகா கடந்த 2002-ல் பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பிரகாஷ் நகர் வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2013-ல் சட்டப்பேரவை தேர்தலில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாம் நாகா தன்னை ஒரு காந்தியவாதி என்று வெளியே சொல்லிக் கொள்வார். காந்தியவாதியைப் போல தொப்பி அணிந்துகொண்டு, கதர் ஆடையோடு வலம் வருவார்.

இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என இதுவரை 45 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பெங்களூரு ரவுடி பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. காந்திய வாதியாக வேடம் போட்டு பல தொழிலதிபர்களை கடத்தி, பணம் பறித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இவரது மனைவி லட்சுமி தர்மபுரியை சேர்ந்தவர் என்பதால் அங்கு தப்பிச் சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே தனிப்படை போலீஸார் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x