

உறவுப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானுல்லா கானை (42) டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி, ஒக்லா தொகுதி எம்எல்ஏவான அமானதுல்லா கானுக்கு எதிராக 32 வயது உறவுப் பெண் ஒருவர் கடந்த வாரம் இப்புகாரை அளித்திருந்தார். இக்குற்றச்சாட்டை மறுத்த அமானுல்லா கான், அப்பெண்ணுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா நகர் காவல் நிலையம் சென்ற அமானுல்லா கான், தான் சரண் அடைவதாக் கூறினார். ஆனால் போலீஸார் அவரை கைது செய்யாமல் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் அவரை புதனன்று கைது செய்தனர்.
இதுகுறித்து அமானுல்லா கான் தனது ட்விட்டர் பக்கத்தில், சரிதா விஹார் பகுதியில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்துக்கு பொதுப் பிரச்சினைக்காக வந்திருந்தேன். ஆனால் போலீஸார் என்னை கைது செய்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.
பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 354ஏ, 506, 509, 120பி, 498ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் அமானதுல்லா கான் மற்றும் அப்பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.