Published : 25 Nov 2013 09:29 AM
Last Updated : 25 Nov 2013 09:29 AM

ம.பி.,மிஸோரம் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்ட நிலையில், மத்தியப் பிரதேசம், மிஸோரம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ராஜஸ்தான், டெல்லி, மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.

ஹேட்ரிக் வெற்றி பெறுமா பா.ஜ.க. :

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதாக கண்டறியப்பட்ட பால்காட் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது பிற்பகல் 3 மணிக்கே இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடித்துக் கொள்ளப்படுகிறது.

முதல் முறையாக சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மின்னணு இயந்திரத்தில் நோட்டா ( யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) பொத்தான் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 2008- ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 143 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என பா.ஜ.க. நம்பிக்கை தெரிவித்துள்ளது.இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8- ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

மிஸோரம் தேர்தல்:

மிஸோரம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாகுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளுக்கு 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தெற்கு லுங்லேய் தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளும் ரிசர்வ் தொகுதிகளாகும். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், மிஸோரம் ஜனநாயகக் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த 2008 தேர்தலில் காங்கிரஸ் 40க்கு 32 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

மிஸோரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. எனவே இந்த முறையும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முணைப்பில் உள்ளது காங்கிரஸ் கட்சி. முதல்வர் லால் தன்வாலா உட்பட அவரது அமைச்சரவையில் இருந்ந்து 11 அமைச்சர்களும் போட்டியிடுகின்றனர்.

ஒப்புகைச் சீட்டு முறை அமல்:

நாட்டில் முதல்முறையாக மிஸோரம் மாநில தேர்தலில், 10 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. இந்த பயன்பாடு, முதன்முதலில் சோதனை அடிப்படையில் நாகாலாந்து இடைத்தேர்தலில் பரிசோதிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் வசதியை படிப்படியாக ஏற்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து இந்த வசதி நாளை அமல் படுத்தப்படுகிறது. தேர்தலில் வாக்கு அளிக்கும் வாக்காளர்களுக்கு, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்காக வழங்கப்படும் சீட்டே ஒப்புகை சீட்டாகும்.

2014 பொது தேர்தலில் இதற்கான வசதியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நியாயமாகவும், சுதந்தரமாகவும் நடைபெற இந்த முறை உதவும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x