

பணமதிப்பு நீக்க முடிவுக்குப் பிறகு சில வாரங்களிலேயே பணப்புழக்கத்தில் இயல்பு நிலை மீட்கப்பட்டுவிட்டது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இது குறித்து செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷனின் 11-வது ஸ்தாபன தினத்தில் அருண் ஜேட்லி பேசியதாவது:
ரிசர்வ் வங்கியின் பண அச்சடிக்கும் நிலையங்கள் மற்றும் பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் அச்சடிக்கும் நிலையங்கள் இடைவேளையின்றி புதிய நோட்டுகள் அச்சடிப்பில் ஈடுபட்டனர். பணமதிப்பு நீக்கம் குறித்து எதிர்க்கருத்துகளை எளிதாகக் கூறிவிடலாம் ஆனால் நடைமுறைப்படுத்துவதே கடினம்.
உலகின் மிகப்பெரிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையாகும் இது. ஊழல், கருப்புப் பணம், கள்ள நோட்டுகளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையாகும் இது.
புதிய நோட்டுகளை மீண்டும் புழகத்தில் கொண்டு வந்து இயல்பு நிலை திரும்ப ஓராண்டாகும், குறைந்தது 7 மாதங்களாவது ஆகும் என்று சிலர் கூறினர், ஆனால் சிலவாரங்களிலேயே இயல்பு நிலை திரும்பியது, வங்கிகளில் ஒருநாள் கூட பணம் இல்லாமலில்லை.
நாட்டில் இதனால் ஒரு அசம்பாவித சம்பவம் கூட நடக்கவில்லை. காரணம் பணப்புழக்கம் சிலவாரங்களிலேயே சரிசெய்யப்பட்டு விட்டது.
நீண்ட நாட்களுக்கு 24 மணிநேரம் இடைவெளியின்றி பணியாற்றி திறம்பட புதிய நோட்டுகளை புழக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.
பொருளாதார விவகார செயலர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, “கடந்த ஓராண்டாக, குறிப்பாக பணமதிப்பு நீக்க காலக்கட்டத்தில் இவர்கள் திறம்பட பணியாற்றியுள்ளனர். எஸ்.பி.எம்.சி.ஐ.எல். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நாள் முழுதும் 24/7 பணியாற்றியுள்ளனர்” என்று பாராட்டினார்.