

குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இனிமேல் இந்தி மொழியில்தான் உரையாற்ற முடியும். இதற்கான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள் ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011-ம் ஆண்டு அளித்த பரிந்துரை களுக்கு, இப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பரிந்துரைகளில் முக்கியமானவற்றை பிரணாப் ஏற்றுக் கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட் டோர், இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால், தங்களது உரையையும், அறிக்கை யையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளலாம் என்பதும் பரிந்துரை களில் ஒன்று. இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளதாக அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனைத்து இந்திய விமானங்களிலும் இந்தி, அதைத் தொடர்ந்து ஆங்கிலத் திலும் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்பதும், செய்தித் தாள்கள் உள்ளிட்ட இதழ்களில் பாதி இந்தி மொழி சார்ந்ததாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்கிற பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஏர் இந்தியா, பவன் கன்ஸ் ஹெலிகாப்டர் பயண டிக்கெட்டுகளில் இந்தி பிரதா னமாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற பரி்ந்துரையையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மாநிலங்களுக்கு உத்தரவு
அனைத்து சி.பி.எஸ்.இ., கேந் திரிய வித்யாலயா பள்ளிகளி லும் இந்தியை கட்டாயப் பாட மாக சேர்க்கவேண்டும் என்ற பரிந்துரையையும் ஏற்றுக் கொண்டுள்ளார் குடியரசுத் தலைவர். எனினும் இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசித்து கொள்கை வகுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கட்டாயம்
மத்திய அரசின் பாடத்தின் கீழ் செயல்படக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்தியை இனி கட்டாயப் பாடமாக மாணவர்கள் படிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபற்றி குடியரசுத் தலைவரின் ஆணையில் கூறப்பட்டுள்ள தாவது:
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை தீவிர கவனம் செலுத்தி, இந்தி மொழியை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். இதன் முதல்கட்டமாக மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.