கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கருப்பு பணம் வைத்திருப்போரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தது. ஆனால், கருப்பு பணத்தை மீட்காமல், அதை ஊக்குவிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

கிசான் விகாஸ் பத்திரம் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் குறித்து சியாமளா கோபிநாத் குழு அளித்த அறிக்கையில், இத்தகைய திட்டங்கள் சட்டவிரோதமான பணப் பரிமாற்றத்துக்கும், தீவிரவாதத்துக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கும் பயன்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது. அதோடு, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தது. அதனடிப்படையில் இத்திட்டத்தை முந்தைய மத்திய அரசுகள் கைவிட்டன.

இந்நிலையில், கிசான் விகாஸ் பத்திரத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த நரேந்திர மோடி, இப்போது சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தை (கருப்பு பணம்) ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏன்?

சியாமளா கோபிநாத் குழுவின் பரிந்துரையின்படி தடை செய்யப்பட்ட இந்த திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளதன் நோக்கம் என்ன என்பதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்க வேண்டும்.

கருப்பு பணம் ஒழிப்பு குறித்து வெறும் பெயரளவுக்குத்தான் பேசினார்களா என்பது குறித்து பாஜகவினர் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.

விரைவில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், பாஜக அரசை விமர்சித்து சிறுநூல் ஒன்றை வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதில், தேர்தலுக்கு முன்பு பாஜக கூறியதற்கும், ஆட்சிக்கு வந்த பின்பு இப்போது அக்கட்சி தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை அம்பலப்படுத்தப் போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in