

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப் பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் 58 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மேற்குவங்க உள்துறை அமைச்சர் எச்.ஏ.சாப்வி தெரிவித்தார்.
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் குணால் கோஷ் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
சாரதா சிட்பண்ட் ஊழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட 50 முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று குணால் கோஷ் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 10-ம் தேதி கொல்கத்தா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இதே கோரிக்கையை நீதிபதி முன்பு வலியுறுத்தினார். 72 மணி நேரத்துக்குள் 50 பேரையும் கைது செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர் சிறையில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். நள்ளிரவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறை டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மேற்கு வங்க உள்துறை அமைச்சர் எச்.ஏ.சாப்வி நிருபர்களிடம் கூறியபோது, குணால் கோஷ் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்
குணால் கோஷ் அடைக்கப்பட்டுள்ள சிறையின் வாசலில் 24 மணி நேரமும் 2 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவில் குணால் கோஷை சோதனை செய்தபோது அவரிடம் எதுவும் இல்லை என்று பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் 58 தூக்க மாத்திரைகளை விழுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சிறை வளாகத்துக்குள் அவர் எவ்வாறு தூக்க மாத்திரைகளை கொண்டு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர், சிறை டாக்டர், வார்டன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
குணால் கோஷ் யார்?
கொல்கத்தாவில் பத்திரிகையாளராக பணியாற்றிய குணால் கோஷ் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திய ஊடகங்களின் தலைமை நிர்வாகியாக அவர் பதவி வகித்தார்.
பின்னர் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் குறிப்பிடும் 50 பேர் குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியபோது, சாரதா சிட்பண்ட் தலைவர் சுதீப் சென், குணால் கோஷ் ஆகியோர் குறிப்பிடும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆதாரமில்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது என்று தெரிவித்தன.