

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என இடதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து அதன்பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செயலிழக்கச் செய்யும் வகையிலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாகவும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீப காலமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்த வழியைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே இந்த முடிவைக் கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குற்ற வழக்கு களில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவசரக் கோலத்தில் இது தொடர்பான அவசர சட்டத்தை பிறப்பிக்கக் கூடாது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இப்போது தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்துவிடுகின்றனர். இதனால் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்கள்.
இந்நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதும் உடனடியாக அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, தண்டனை பெற்றவர்கள் 90 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்து, அந்த மனு மேல் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் தொடரலாம் என சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தபோதும் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை செவ்வாயன்று அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.