காஷ்மீரில் திடீர் பனிச்சரிவு வீடுகள் இடிந்தன; 12 பேர் பலி

காஷ்மீரில் திடீர் பனிச்சரிவு வீடுகள் இடிந்தன; 12 பேர் பலி
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறான அதிக பனிப்பொழிவால், திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 2 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

காஷ்மீரில் பனிப்பொழிவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவில் பல்வேறு வீடுகள், கட்டிடங்கள், ராணுவ முகாம்கள் சிக்கியதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சில இடங்களில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடக்கிறது.

பனிச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கவும் மாநில அரசு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் படையினரை அனுப்பி வைத்துள்ளது என முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பனிச்சரிவால் வீடு இடிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் 8 பேர் காயமடைந்தனர். லடாக் பகுதியில் ராணுவ முகாம் பனிச்சரிவில் சிக்கியதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெய்சீரன்-டிராக்டுன் கிராமத்தில் இரு வீடுகள் பனிச்சரிவில் இடிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். காஸிகண்ட் பகுதியிலுள்ள மிமிகாம் கிராமத்தில் தகரக் கொட்டகையில் வசித்த 48 வயது பெண், பனியின் அடர்த்தி தாங்காமல் கொட்டகை சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

கார்கில் பகுதியிலுள்ள காக்சார் கிராமத்தில் கல்குவாரியில் பணிபுரிந்த நேபாள தொழிலாளர் 3 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பனிச்சரிவு அபாயமுள்ள காஸிகண்ட் பகுதியிலிருந்து 20 குஜ்ஜார் குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பனிச்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதீத பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் வான்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் மற்றும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சரிவான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டம் பனிச்சரிவால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. எதிர்பார்த்ததை விட அங்கு சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in