Published : 21 Nov 2014 10:00 AM
Last Updated : 21 Nov 2014 10:00 AM

தொழிலதிபர் கொலை முயற்சி வழக்கில் ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது

ஹைதராபாத்தில் தொழிலதிபரை ஏகே 47 துப்பாக்கி மூலம் கொலை செய்ய முயன்ற மர்ம நபர் ஆயுதப்படை காவலர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு காவலர் உட்பட 4 பேரை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத் கேபிஆர் பூங்காவில் அரபிந்தோ பார்மஸி துணை நிர்வாக தலைவர் நித்தியானந்த ரெட்டி, நேற்று முன் தினம் காலை நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர் அவர் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்ட போது அடையாளம் தெரியாத நபர் பையுடன் காரின் பின் சீட்டில் ஏறினார். பின்னர் அவர் ஏகே 47 துப்பாக்கியை வைத்து மிரட்டி நித்தியானந்த ரெட்டியை கடத்த முயன்றார். ரெட்டி அவரை தடுத்ததால் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியில் இருந்து 8 ரவுண்டு குண்டுகள் வெடித்தன. இதில் நித்தியானந்த ரெட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மர்ம நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விட்டார்.

இந்த வழக்கில் மர்ம நபர் விட்டு சென்ற துப்பாக்கி முக்கிய தடயமாக இருந்தது. இந்த துப்பாக்கி கடந்த ஆண்டு ஹைதராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் காணாமல் போனது என்று தெரியவந்தது. மேலும் பூங்காவில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த கொலை முயற்சியில் மர்ம நபர் உட்பட மேலும் 3 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனிடையே ஹைதராபாத் போலீஸார், அம்பர் பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர் ஓபுலேஷ் உட்பட மேலும் 3 பேரை கைது செய்தனர்.

ஓபுலேஷ், 1998-ம் ஆண்டு ஆயுத படை போலீஸில் பணி யில் சேர்ந்தார். தற்போது 15 நாட்களாக விடுப்பில் உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு வழங்கப்பட்ட ஏகே 47 துப்பாக்கி காணாமல் போனதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து பணி இடை நீக்கம் செய்தனர். பின்னர் வேறு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்தனர்.

ஓபுலேஷ் அந்த ஏ.கே.47 துப்பாக்கி மூலம் தொழிலதிபர்கள், பணக்காரர்கள், உயர் அதிகாரிகளை கடத்தி அவர்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் அரசு உயரதிகாரியை இதே துப்பாக்கியால் மிரட்டி கடத்தி உள்ளார். அவரிடம் ரூ. 10 லட்சம் வாங்கிய பிறகு விடுவித்துள்ளார்.

இதே போன்று தொழிலதிபர் நித்தியானந்த ரெட்டியை கடத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததால் அங்கிருந்து தப்பி விட்டார்.

ஹைதராபாத்தில் இருந்து அனந்தபூர் செல்லும் பஸ்ஸில் ஏறி தப்பி செல்லும் போது அவருடைய செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் பின் தொடர்ந்து கர்னூல்-அனந்தபூர் இடையே நேற்று அதிகாலை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x