

காஷ்மீரில் இயல்புநிலை திரும்பு வதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது. 3 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி களைத் தவிர, மற்ற இடங்களில், 51 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு நேற்று தளர்த்தப்பட்டது.
புல்வாமா நகரம் மற்றும் நகரின் எம்.ஆர்.கஞ்ச், நவ்ஹாட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி ஆகிய மூன்றைத் தவிர்த்து, அனைத்து இடங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், பதற்றமான பகுதிகளில் முழு அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பகுதியில் உள்ள சாலைகளில் பொதுமக்களுக்கான அரசு போக்குவரத்து வாகனங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. எனினும், நேற்று காலையிலிருந்து தனியார் வாகனங்கள், ஆட்டோ ரிக்்ஷா போன்றவை ஓடத் தொடங் கின. நகரின் லால் சவுக் செல்லும் சாலைகளில் நேற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், அரசுத் துறை அலு வலகங்களில் பணியாளர்களின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. வங்கிகளும் நேற்று திறந் திருந்தன. எனினும், பள்ளி, கல்லூரி கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், வர்த்தகக் கூடங்கள் மூடிக்கிடந்தன.
அத்தியாவசிய தேவைகளுக் கான சேவைகள் தவிர்த்து, மற்ற அனைத்து அலுவலகங்கள், கடை கள், வர்த்தக நிறுவனங்களை மூடுமாறு பிரிவினைவாதிகள் நேற்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் சில பிரிவினைவாத குழுக்கள், பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே அறிவித்திருந்த முழு அடைப்பு போராட்டத்தை செப்டம்பர் 1-ம் தேதி வரை நீட்டித்துள்ளன.
எனினும் பத்காம் மாவட்டம் மற்றும் நகரின் ஒரு சில இடங்களில் நேற்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மீது கற்களை வீசினர். கண்ணீர் புகை குண்டு வீசி காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தினர். இச்சம்பவங் களில் யாரும் காயமடையவில்லை.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கலவரத்தால், ஜூலை 9-ம் தேதி காஷ்மீர் பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர் கலவரங்களில் 2 போலீஸார் உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் சட்டம் ஒழுங்கு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால், நகரின் ஒரு சில இடங்களில் நேற்று வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. ஸ்ரீநகர், பட்மாலூ பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காவல் துறையினரை நோக்கி கற்களை வீசினர்.
அனைத்து கட்சி குழு காஷ்மீர் பயணம்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 4-ம் தேதி காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கும், சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, அனைத்துக் கட்சிக் குழுவினர் காஷ்மீரின் பலதரப்பு மக்களையும், அமைப்புகளின் தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக, பாஜக தலைவர் அமித் ஷா, நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோருடன், ராஜ்நாத் சிங் நேற்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.