

தெலங்கானா விவகாரத்தில் ஆந்திர மக்களைக் காயப்படுத்திவிட்டதாக, காங்கிரஸ் மீது பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் தவங்கிரி இன்று நடைபெற்ற பேரணியில் அவர் பேசியது:
"காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள்களுக்கு முன்பு கர்நாடகம் வந்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தென்னிந்தியாவில்தான் இருந்தார். இருவருமே தென்னிந்தியா வந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆனால், அருகிலுள்ள ஆந்திராவுக்குச் செல்வதற்கு அவர்களுக்கு நேரமே இல்லை.
காங்கிரஸ் இன்று தந்த காயத்தால் சீமாந்திரா மற்றும் தெலங்கானா சகோதாரர்கள் வேதனையடைந்துள்ளனர். ஆனால், அவர்கள் (சோனியாவும் ராகுலும்) இந்தக் காயத்துக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
ஆந்திர மக்கள் இன்று பிரச்சினையில் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசுவதற்குக் கூட காங்கிரஸ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. தங்களை ஆட்சியில் அமரவத்தை மக்களின் உணர்வுகளையும், பாதிப்பையும் பற்றி காங்கிரஸுக்குக் கவலையில்லை.
இங்கே சில தினங்களுக்கு முன்பு பேசிய ராகுல் காந்தி, மகளிருக்கு அதிகாரமளிப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டார். அந்த அளவுக்கு பெண்கள் மீது கவலைப்படுபவராக இருந்தால், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கவலையைப் போக்கும் வகையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
நீங்கள்தான் (காங்கிரஸ்) டெல்லியை பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக மாற்றி, இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியவர்கள்.
ஊழல் பற்றி பேசும் ராகுல், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் சிறையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீது எத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். காங்கிரஸும் ஊழலும் இரட்டைச் சகோதரிகள்.
பாஜகவினால்தான் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேறுவதில்லை என்று ராகுல் சொல்கிறார். மக்கள் முன்பு உண்மையைப் பேசுவதற்கு அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அவை நடவடைக்களுக்கு குந்தகம் விளைவித்த உறுப்பினர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்" என்று நாடாளுமன்றத்தில் சீமாந்திராவைச் சேர்ந்த எம்.பி. பெப்பர் ஸ்பிரே அடித்ததைச் சுட்டிக்காட்டினார் நரேந்திர மோடி.