

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் 150 மீ பிரிட்டிஷ் கால பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த்து குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செவ்வாயன்று இந்தப் பதுங்கிடத்தைப் பார்வையிட்டார்.
சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஆளுநர் வித்யாசாகர ராவிடம் ராஜ்பவனில் இத்தகைய பதுங்கு குழி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து சுரங்கப் பதுங்கு குழியைத் திறக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 12-ம் தேதி பதுங்குக் குழியை அடைத்து நின்ற தற்காலிக சுவரை பொதுப்பணித் துறையினர் உடைத்துத் திறந்தனர். 20 அடி உயர கதவுடன் மேற்குப்புறத்தில் சரிவுப்பாதை ஒன்றும் இருந்தது. நீண்ட வராண்டாக்கள் சிறியது முதல் நடுத்தர அளவுடைய அறைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது,
இந்த அறைகளுக்கு ஷெல் ஸ்டோர், கன் ஸ்டோர், காட்ரிட்ஜ் ஸ்டோர் உள்ளிட்ட பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்த பதுங்கு குழி மூடப்பட்டாலும் இதன் தோற்றம் அப்படியே மாறாமல் இருந்து வருகிறது. கழிவுநீர் வெளியேற்றப் பாதை, காற்று மற்றும் வெளிச்சம் வர திறப்புகள் ஆகியவையும் காணப்பட்டன.
ராஜ்பவன் வரலாற்றைப் பார்க்கும் போது, 1885-ம் ஆண்டுக்கு முன்பு இது பிரிட்டிஷ் கவர்னர்கள் தங்குமிடமாக இருந்துள்ளது. 1885-ல் ரியே பிரபு மலபார் ஹில்குடியிருப்பை பிரிட்டன் கவர்னர்களுக்கான் நிரந்தர குடியிருப்பாக மாற்றினார்.
இந்நிலையில், மஹாராஷ்டிர கவர்னர் வித்யாசாகர் ராவ் தன் மனைவி விநோதாவுடன் வியாழனன்று இந்த பதுங்கிடத்தைப் பார்வையிட்டார். இந்த பதுங்கு குழியை பாதுகாக்க நிபுணர்கள் குழு பரிந்துரைகளை கவர்னர் நாடியுள்ளதாகவும் தெரிகிறது.