

பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்க கனவு காணும் வெளியாட்களை திருப்பி அனுப்புங்கள் என்று ஆம் ஆத்மியை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் மால்வா பகுதியில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் மோடி பேசியதாவது:
இந்தத் தேர்தலில் பஞ்சாபை அழிப்பதற்காக, சொந்த உலகை உருவாக்க சிலர் (ஆம் ஆத்மி) மிகவும் ஆவலுடன் உள்ளனர். இதுபோன்ற (ஆட்சி அமைக்க) கனவு காண்பவர்களை எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்துக்கே திருப்பி அனுப்புங்கள்.
முதலில் எங்கு (டெல்லி) ஆட்சி அமைத்தார்களோ அங்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்களா என அவர்களிடம் கேளுங்கள். அங்கு வாக்குறுதியை முதலில் நிறைவேற்றுமாறு அவர்களிடம் கூறுங்கள்.
பஞ்சாபில் ஆட்சி அமைக்க ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் (காங்கிரஸ்) வெளியாட்களுக்கும் வாய்ப்பு அளித்தால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
எனவே, பாஜக-சிரோமணி அகாலி தளம் கூட்டணிக்கு மூன்றாவது முறையாக மீண்டும் வாய்ப்பு கொடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.