

பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதில் மே மாதம் 14-ம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறையாக இருக்கும் என்றும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை இருந்து வருகிறது என்றும் கூறியிருந்தது.
இதனையடுத்து ஞாயிற்றுக் கிழமைகளில் கள்ளச்சந்தையில் விலை அதிகமாக பெட்ரோல், டீசல் விற்பனையாகலாம் என்ற கடும் விமர்சனங்கள் பலதரப்புகளிலிருந்தும் எழுந்தது.
இந்நிலையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.