

விசா மோசடி வழக்கில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை தேவயானி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வெகுவிரைவில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுமுக தீர்வு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி கோப்ரகடே கடந்த 12-ம் தேதி விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு அவரை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகப் பணிக்கு மாற்றியது. ஐ.நா. தூதரக அதிகாரி என்ற முறையில் அவருக்கு உரிய சட்டப் பூர்வ பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகத்தின் ஆலோசக ராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானி யின் பணியை அங்கீகரிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூ னுக்கு இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி அண்மையில் கடிதம் அனுப்பினார்.
தேவயானிக்கு உரிய அடையாள அட்டை வழங்கக் கோரி ஐ.நா. தரப்பில் இருந்து அமெரிக்க வெளியு றவுத் துறைக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்தே விசா மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தேவயானிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.