

பெங்களூரு ஏடிஎம் மையத்தில் தாக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போன் ஆந்திர மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியை நெருங்கி வருவதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
பெங்களூரில், கடந்த செவ்வாய்க்கிழமை வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் ஜோதி உதய் என்பவர் ஏ.டி.எம். மையத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார். குற்றவாளியைப் பிடிக்க 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 நாட்களாகியும் குற்றவாளி பிடிபடாத நிலையில், இன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் இருக்கும் இடத்தை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். செல்போன் ஆந்திர மாநிலத்தில் இருப்பதை, சிக்னல்களை வைத்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையில், அந்த செல்போனை வேறு ஒருவர் வைத்திருப்பது தெரியவந்தது. செல்போன் வைத்திருந்தவர் அதை தான் ஒருவரிடம் இருந்து நேற்று தான் விலைக்கு வாங்கியதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஆந்திராவிலும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது கர்நாடக போலீஸ்.
ஏ.டி.எம். மையத்தில் பெண் தாக்கப்பட்ட காட்சிகள் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரிவாளால் அவர் வெட்டப்படும் காட்சிகள் அந்த ஏ.டி.எம். மையத்தின் வீடியோ கேமிராவிலும் பதிவாகி இருக்கிறது.
பெண்ணின் பையில் 15 ஆயிரம் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனாலும் பெண்ணின் நகைகள் அப்படியே இருப்பதால் இது தனிப்பட்ட விரோதத் தாக்குதலாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள்.