Last Updated : 08 Nov, 2014 10:43 AM

 

Published : 08 Nov 2014 10:43 AM
Last Updated : 08 Nov 2014 10:43 AM

பலாத்கார செய்திகளை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன: கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கண்டனம்

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் பாலியல் பலாத்காரங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.தொலைக்காட்சி செய்தி சேனல் கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த் துவதற்காக‌ பலாத்கார செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன என உள் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் ஊடகங்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மகளிர் அமைப்புகளும், கர்நாடக எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெரிதுபடுத்தும் ஊடகங்கள்

தொடரும் பலாத்கார சம்பவங்கள் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பெங்களூரில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கி றார்கள்.ஆனால் ஊடகங்கள் பெங்களூரை ப‌லாத்கார நகரம் போல மிகைப்படுத்திக் காட்டுகின்றன.

அதிலும் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக பலாத்கார சம்பவங்களை பெரிய அளவில் செய்தியாக்குகின்றன. ஊடகங்கள் சொல்லும் அளவுக்கு பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகவில்லை''என்றார்.

கண்டனம்

இது தொடர்பாக கர்நாடக முன்னாள் மகளிர் ஆணைய தலைவர் பிரமிளா நேசர்கி கூறும்போது, “பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துள்ளது. தங்களது குறையை மறைப் பதற்காக ஊடகங்கள் மீது உள்துறை அமைச்சர் ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகங்கள் பெண்களின் மீதான வன்கொடுமைகளை வெளியே கொண்டுவந்தால் அதனை தூற்றக்கூடாது.

டெல்லி பலாத்கார சம்பவத்தில் ஊடகங்கள் அளித்த அழுத்தத்தின் காரணமாகவே பெண் கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு வலுவான சட்டத்தை கொண்டு வந்தது. அதே போன்ற சட்டத்திருத்தத்தை மேற்கொண்டு கர்நாடகத்தில் பள்ளி சிறுமிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.நாட்டின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்களை விமர்சனம் செய்த‌து அரசியல் சாசனத்துக்கு எதிரானது''என்றார்.

பதவி விலக வேண்டும்

இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அசோக் கூறும்போது, “பெங்களூருவில் நடக்கும் பலாத்கார சம்பவங்களால் கர்நாடத்துக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உள்துறை அமைச்சர் ஜார்ஜ், தான் என்ன பேசுகிறோம் என தெரியாமல் உளறியுள்ளார்.அரசின் குறையை எடுத்துச்சொல்லும் ஊடகங்களை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அவர் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அதுவரை பாஜகவின் போராட்டங்கள் ஓயாது''என்றார்.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்

கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்றுமுன்தினம் பேசும்போது, ''உள்துறை அமைச்சர் ஜார்ஜின் தனிப்பட்ட கருத்தை அரசின் கருத்தாக பார்க்கக்கூடாது. மேலும் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு ஊடகங்கள் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கின்றன. இதனை சற்று குறைத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x